நாகர்கோவில் இந்துக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள், தங்களிடம் கல்வி பயிலும் எளிமையான நிலையில் இருக்கும் 26 பேரை தேர்ந்தெடுத்து அவர்களது பெற்றோரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.3,000 வீதம் கரோனாகால நிவாரணமாக செலுத்தியுள்ளனர். இதுகுறித்து கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஜெகதீசன்இந்து தமிழ் திசையிடம் கூறியதாவது:
தொழில்கல்வி பயில்வோரை விட பொருளாதார ரீதியில் அடுத்தஇடத்தில் இருப்போரே கலை, அறிவியல் கல்லூரிகளில் அதிகம் படிக்கின்றனர். அதிலும் தாய்மொழியான தமிழைப் பொறுத்தவரை ஆர்வத்தின் பேரில் எடுப்பவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், பிளஸ் 2 வரை தமிழ் வழியிலேயேகல்வி கற்றோர், அரசுப் பள்ளிகளில் படித்து வந்தோர் ஆகியோர்தேர்வு செய்யும் விருப்பப் பாடமாகவும் தமிழ் இருக்கிறது.
அதனால்தான் இந்த ஊரடங்கில் அவர்களைப் பற்றி யோசித்தோம்.
கல்லூரியில் சீருடை முறை உள்ளது. இதனால் இங்கே மாணவர்கள் அணிந்து வரும் ஆடைகளின் அடிப்படையில் பொருளாதார நிலை குறித்த தீர்மானத்துக்கும் வர இயலாது. தமிழ்த் துறையைப் பொறுத்த வரை ஒவ்வொரு வகுப்புக்கும் பிரத்தியேகமாக வாட்ஸ் அப் குழு இருக்கிறது. அந்த குழுக்களில் அவர்களிடமே வறிய நிலையில் இருக்கும் நண்பர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கக் கேட்டோம். இந்த 26 பேரையும் சக மாணவ, மாணவிகளேதான் தேர்ந்தெடுத்தார்கள்.
எங்கள் துறையில் மொத்தம் 15 பேராசிரியர்கள் இருக்கிறோம். சக பேராசிரியர்கள் அனைவருமே இதற்கு தங்கள் நிதி பங்களிப்பையும் வழங்கினார்கள். மாணவ, மாணவிகளின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் இந்தப் பணத்தை செலுத்தியிருக்கிறோம்' என்றார். என்.சுவாமிநாதன்