நாமக்கல்- கொல்லிமலை வட்டாரக்கல்வி அலுவலரைக் கண்டித்து போராட்டம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




15/03/2020

நாமக்கல்- கொல்லிமலை வட்டாரக்கல்வி அலுவலரைக் கண்டித்து போராட்டம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

*நாமக்கல்- கொல்லிமலை போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளரின் சுற்றறிக்கை எண்:06/ 2020,நாள்:15.3.2020*

*பேரன்பு மிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்*

 *நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரக் கல்வி அலுவலரின் லஞ்சம்,ஊழல் மற்றும் ஆசிரியர் விரோத, மாணவர் விரோத, விதிகளுக்குப் புறம்பான தொடர் செயல்பாடுகளின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி கல்வித் துறையின் உயர் அலுவலர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கொல்லிமலை வட்டாரக் கிளையின் சார்பில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் 09. 03.2020 அன்று கொல்லிமலை வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்டக் கிளையின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது*

*போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அது தொடர்பாக நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் பொருட்டும், பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டும் நான் (பொதுச்செயலாளர்) நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது,"இந்த பிரச்சனை எனது கவனத்திற்கு வரவில்லை.எனது கவனத்திற்குக் கொண்டு வந்து அதில் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்தி இருக்கலாம். போராட்டத்தை முடித்துக் கொள்ளச் சொல்லுங்கள்.நாளை என்னிடம் வந்து நேரடியாகப் பேசச் சொல்லுங்கள்"என்று கூறினார்*

*இச்செய்தியை நம் இயக்கத் தோழர்களிடம் எடுத்துக் கூறியதன் பேரில் அவர்கள் போராட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள்*

*மறுநாள் (10.03.2020) நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை மாவட்ட, வட்டார நிர்வாகிகள் சந்தித்தபோது அவர்களை அவமரியாதை செய்யும் வகையிலும், கோரிக்கைகள் எதைப்பற்றியும் பேசாமலும், அதிகாரத்தின் உச்சத்தில் நின்று பேசியுள்ளார். முதல்நாள் சங்க நிர்வாகிகளை வரச்சொல்லிவிட்டு மறுநாள் வந்த நிர்வாகிகளை அவமரியாதை செய்ததைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு மிக வன்மையாகக் கண்டிக்கிறது*

*விலையில்லாப் பொருட்களை நேரடியாகப் பள்ளிகளுக்கு கொண்டு சென்று வழங்குவதற்கு அரசு வழங்கிய நிதியைக் கையாடல் செய்துள்ள ஒரு வட்டாரக் கல்வி அலுவலர் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் மனு மீது விசாரணை நடத்துவதற்குக் கூட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முன்வராதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது*

*தற்போதைய நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. அய்யணன் அவர்கள் தான் இதற்கு முன்பு பணியாற்றிய அனைத்து மாவட்டங்களிலுமே ஆசிரியர் விரோத நடவடிக்கைகளிலும், அதிகார துஷ்பிரயோகத்திலும், லஞ்ச ஊழல் நடவடிக்கைகளிலும், பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக பல்வேறு புகார்களுக்கு உள்ளானவர்*

*எனவேதான் ஒரு வட்டார கல்வி அலுவலர் மீது புகார் எழும்போது அது பற்றி விசாரிப்பதற்கு கூட முன்வராமல் புகார் தெரிவித்தவர்களையே மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.எனவே, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் முறைகேடான, அத்துமீறிய நடவடிக்கைகளை எதிர்த்து மாநில அமைப்பே நேரடியாகக் களம் காண வேண்டிய சூழல் உருவாகி வருகிறது என்பதை நாம் கல்வித்துறைக்குத் தெரிவிக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது*

*இந்நிலையில் கொல்லிமலையில் வட்டாரக் கல்வி அலுவலரின் லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளை கண்டித்தும், அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் 17.03. 2020 முதல் நாமக்கல் மாவட்டக் கிளையின் சார்பில் மீண்டும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ளது*

*அப்போராட்டத்தில் மாநில அமைப்பின் சார்பில் ஜாக்டோ-ஜியோ நிதிக் காப்பாளரும்,STFI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினருமாகிய தோழர்.ச.மோசஸ் கலந்து கொள்கிறார்*

*அநீதிக்கு எதிரான இப்போராட்டத்தில் அண்டை மாவட்டங்களான கரூர், ஈரோடு,சேலம் மாவட்ட கிளை தோழர்களும், வாய்ப்புள்ள பிற மாவட்டத் தோழர்களும் பங்கேற்றுத் தோள் கொடுத்திட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது*

*நாமக்கல் மாவட்ட நம் இயக்கத் தோழர்கள் தனித்தில்லை என்பதை சம்பந்தப்பட்ட  நாமக்கல் மாவட்டக் கல்வித்துறை அலுவலர்கள் புரிந்துகொண்டு கோரிக்கைகளின் மீது உரிய,நியாயமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு எதிர்பார்க்கிறது*

 *தோழமையுடன்*
*ச.மயில்*
*பொதுச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459