தேனீரில் 3 ரசாயனங்கள்.......டாக்டர் லியாங்......! #கொரோனா வதந்திகளும் விசாரித்த உண்மையும் - ஆசிரியர் மலர்

Latest

27/03/2020

தேனீரில் 3 ரசாயனங்கள்.......டாக்டர் லியாங்......! #கொரோனா வதந்திகளும் விசாரித்த உண்மையும்

`

கொரோனா’ – உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் அரசுகள் கூடுதல் கவனம் செலுத்திக்கொண்டிருக்கின்றன. உலக அளவில் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் முன்னெச்சரிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு மட்டும் போதாது,
பாதிக்கப்பட்ட மக்களை முறையான மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்தச் சூழலில் சமூக வலைதளங்களில் பரவி வரும் பொய்யான தகவல்கள் பாதிப்பின் தீவிரத்தை அதிகப்படுத்தக் கூடும்.
“Dr.Liwenliang, சீனாவின் ஹீரோ டாக்டர். முதன்முதலாகக் கண்டுபிடித்தற்காக சீன அரசால் தண்டிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர். அதே வைரஸால் பீடிக்கப்பட்டு அநியாயமாகப் பலியானார். ஆனால், அந்தக் கதாநாயகன் இடைப்பட்ட சிறுகாலத்தில் தனது மனிதநேயமிக்க திறன்வாய்ந்த ஆராய்ச்சிகள் மூலம் அதற்குத் தீர்வையும் விட்டுச் சென்றிருக்கிறார்.
ஆம். கோவிட் – 19 என்ற அரக்கனின் ஆற்றலைக் கொன்றுவிடும் ரசாயனங்களான methylxine, theobromine மற்றும் theophyline என்ற ரசாயனங்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அதைக் கட்டுப்படுத்துகிறது.
இதில் வியப்பான விஷயம் என்னவென்றால், அந்த 3 ரசாயனங்களும் செரிந்திருப்பது நாம் தினமும் அருந்தும் Tea எனும் பாணத்தில்தான்.



கொரோனா

தேயிலைச் செடி இந்த ரசாயனங்களை உற்பத்தி செய்து அதை அண்டவிடாமல் உயிர்களைக் காக்கிறது. இதைத் தெரிந்துகொண்ட சீன வைத்தியர்கள் தினமும் மூன்று வேளை தேநீர் வழங்கி பெரும்பாலான நோயாளிகளைக் குணப்படுத்திவிட்டனர். இறுதியில் Pandemic நோயின் மையமான wuhan முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதைப் பகிருங்கள். தீர்வு உங்கள் சமையலறையிலேயே இருக்கிறது’’ இப்படி ஒரு தகவல் மிகவேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜீ.ரவீந்திரநாத்திடம் பேசினோம்.
“இது மேம்போக்கான வாதம். அறிவியல்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படாதது. இது ஒரு புதிய வைரஸ். அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதில் தவறில்லை. `theophyline’ மூலம் தீர்வு கிடைக்குமா என ஆய்வு செய்வதில் தவறில்லை. ஆனால், எதுவுமே நிரூபிக்கப்படமால் இப்படி ஒரு தகவலைப் பரப்பினால், மக்கள் என்ன நினைப்பார்கள்?
`இருமல், சளி இருக்கிறதா…டீயைக் குடித்து சரி செய்துவிடலாம்’ என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். இது தவறான நம்பிக்கையை அளித்துவிடும். இதுபோன்ற சூழலில் தவறான நம்பிக்கையை அளிப்பது மிகவும் ஆபத்தானது.


டாக்டர் ரவீந்திரநாத்

அதனால், இப்படி நிரூபிக்கப்படாத தகவல்களைப் பரப்பக் கூடாது. `பூண்டு சாப்பிட்டால்
சரியாகிவிடும்; மிளகு சாப்பிட்டால் சரியாயிடும்’ என்று சொல்வார்கள் தெரியுமா? அப்படித்தான் இது. பூண்டிலும் மிளகிலும் மருத்துவக் குணம் இருக்கலாம். ஆனால், இந்த வைரஸுக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்க அது பயன்படுமா என்பதுதான் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது.
`theophyline’ பண்டைய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டதுதான். இதை முதலில் பயன்படுத்தியவர்கள் சீனர்கள். பெரிதாக மருத்துவ வசதிகள் இல்லாத காலத்திலேயே தேயிலைச் செடியில் இருக்கும் இதன் மூலம் ஆஸ்துமாவுக்கு சீனர்கள் மருத்துவம் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அவை கொரோனாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்குமா என்று
எந்தவொரு ஆய்வும் இதுவரை நிரூபிக்கவில்லை. அதனால், ஒரு தகவலைப் பரப்புவதற்கு முன்பாக அது உண்மையானதா என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பது மிக மிக முக்கியமானது’’ என்றார்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் பேசினோம். “தேயிலையில் இருக்கும் ரசாயனங்கள் கொரோனா வைரஸுக்கு எதிர்ப்பு மருந்து என்பது இதுவரை எங்குமே நிரூபிக்கப்படாதது. அதனால், இதுபோன்ற நிரூபிக்கப்படாத தகவலைப் பரப்ப வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459