தமிழகத்தில் 82.5 சதவீத பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 82.5 சதவீத அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைந்துள்ளன.
திறன்மிகு வகுப்பறைகளை கொண்டுள்ளதில் தமிழகம் இந்தியாவில் முதலிடம் பிடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில், திறன்மிகு வகுப்பறைகள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருப்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது, குஜராத்தில் 57.1 சதவீதம், மத்தியப் பிரதேசத்தில் 7.6 சதவீதம், மகாராஷ்டிராவில் 4.6 சதவீதம், உத்தரப் பிரதேசத்தில் 3.6 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே திறன்மிகு வகுப்பறைகள் உள்ளன.
திமுக ஆட்சி 2021-ல் பொறுப்பேற்ற நிலையில், தமிழகத்தில் 43.5 சதவீத பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் இருந்தன. தற்போது 99 சதவீத பள்ளிகளில் இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2024-25-ல் 82.5 சதவீத பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைந்துள்ளன. மத்திய அரசு வெளியிட்டு வரும் ஆய்வறிக்கைகள் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment