தேர்வு முடிவுகள் வெளியிடாமல் மீண்டும் மீண்டும் தேர்வு: குழப்பத்தில் தேர்வர்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/06/2025

தேர்வு முடிவுகள் வெளியிடாமல் மீண்டும் மீண்டும் தேர்வு: குழப்பத்தில் தேர்வர்கள்

 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள் தொடர்பாக, தேர்வர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.


கடந்த, 2018 டிசம்பரில் வெளியான அறிவிப்பின் அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான, 18 காலிப் பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தப்பட்டது. 2020ம் ஆண்டு டிசம்பரில், தேர்வுக்கான வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, நியமனங்களும் செய்யப்பட்டன.

ஆனால், அந்த நியமனங்களில் முறைகேடு உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, அந்த நியமனங்கள் மீது தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், குரூப் 1சி பிரிவில், 2023ம் ஆண்டு, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான 11 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. 111 பேர் தேர்வெழுதினர். 2024ல் மேலும் 8 பணியிடங்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், தேர்வு முடிந்து பல மாதங்கள் கடந்தும், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

கல்வி அலுவலர் பணி நியமனங்கள் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதும், 2023, 2024ல் டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, அதே பதவிகளுக்கு புதிய தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே தேர்வு நடைபெற்று நியமனங்கள் நடைபெறாத நிலையில், அதே பதவிக்காக மீண்டும் தேர்வுகள் நடத்தப்படுவது, டி.என்.பி.எஸ்.சி., செயல்முறைகள் மீது குழப்பத்தையும், சந்தேகத்தையும் உருவாக்குவதாக, தேர்வர்கள் தெரிவித்தனர்.
தேர்வர்கள் கூறுகையில், நியமனங்கள் தொடர்பான வழக்கு, நிலுவையில் உள்ளதை காரணமாகக் காட்டி, ஏற்கனவே நடைபெற்ற தேர்வுகளுக்கான நியமனங்கள் நடைபெறாத நிலையில், மீண்டும் புதிய அறிவிப்புகள் வெளியாகி தேர்வு நடத்தப்படுகிறது.

இது, பல ஆண்டுகளாக அரசு வேலைக்காக காத்திருக்கும் எங்களை போன்ற தேர்வர்களுக்கு ஏமாற்றத்தையே தருகிறது. தேர்வுகள் முடிந்தவுடனே தாமதமின்றி முடிவுகள் வெளியிட வேண்டும். ஆனால் டி.என்.பி.எஸ்.சி.,யில் நடப்பதெல்லாம் மர்மமாகவே உள்ளது, என்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459