ஒவ்வொரு மாணவரும் ஓர் ஆசிரியரே! | வகுப்பறை புதிது - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/02/2025

ஒவ்வொரு மாணவரும் ஓர் ஆசிரியரே! | வகுப்பறை புதிது

 1351273

ஒவ்வொரு பள்ளியும் ஒரு பெரிய குடும்பம். ஆசிரியர்கள், மாணவர்கள், உதவியாளர்கள் முதலிய அனைவருக்குமே அவரவர்களுக்கு என்று ஒரு பணி, ஒரு பங்களிப்பு இருக்கிறது. ஒவ்வொருவரும் முக்கியம்தான் என்று இயல்பாக ஒன்றிணையும்போது அங்கு கல்வி நடைபெறுகிறது. பாகுபடுத்தும் மனப்பான்மை வரும்போது கல்வி தடைப்படுகிறது- டிம் ஹீத்.


நியூசிலாந்தின் அற்புத கல்வியாளரான டிம் ஹீத் சற்றும் எதிர்பாராமல் ஆசிரியரானவர். தான் ஆசிரியர் ஆனது ஒருவித விபத்து (The Accidental Teacher) என்று அவர் புத்தகம் எழுதி இருக்கிறார்.

TEACHERS NEWS
நியூசிலாந்தில் அடிமைகளாக நடத்தப்பட்ட நாடோடி கறுப்பின குழந்தைகளின் கனவு நாயகராகத் திகழ்ந்த இவர் அற்புதமான கவிஞரும் கூட.

எதிர்பாராமல் ஆசிரியரானவர் பள்ளிப் படிப்பை முடித்ததும் பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக் ஊர்தி ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்றாண்டுகள் கனரக வாகனங்களை ஓட்டியவர் டிம் ஹீத். பிறகு சாலை பராமரிப்பு குழுமத்தில் இரண்டு ஆண்டுகள், நூலகம் ஒன்றில் கலைந்துபோன புத்தகங்களை அடுக்கி வைப்பவராக ஓராண்டு என்றெல்லாம் தன்னுடைய காலத்தைக் கழித்துவந்தார்.


திடீரென ஒருநாள், “ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஓர் இடம் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது, நீங்களும் வருகிறீர்களா?” என நண்பர் கேட்டார். அவரது அழைப்பை ஏற்றுச் சற்றும் எதிர்பாராமல் ஆசிரியரானார் டிம் ஹீத். அப்படி அவரை தூண்டிய நண்பர் சக லாரி ஓட்டுநரின் இளைய மகனாவார். மாலை நேரத்தில் அந்த நாடோடி கருப்பின குழந்தைக்குத் தன்னையும் அறியாமல் ஏற்கெனவே டிம் ஹீத் ஆசிரியராகி இருந்தார்.


வாசிப்பில் 6 நிலைகள்: கல்வியின் ஆகச்சிறந்த அடையாளம் எது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. ஒரு குழந்தையைப் புத்தக வாசிப்புக்குள் அழைத்து வரும் ஆறு நிலைகளை டிம் ஹீத் பரிந்துரைக்கிறார். புத்தகம் அல்லது பாடம் அல்லது ஒரு பகுதியின் உள்ளர்த்தத்தை உணர்ந்து குழந்தை அதனைப் படிக்க உதவ வேண்டும். அதற்கு முதலில் அந்த பாடத்தினுடைய கடினமான சொற்களை ஆசிரியர் என்கிற முறையில் எடுத்து தனித்தனி அட்டைகளில் பதிவுசெய்ய வேண்டும். அந்த அட்டைகளைக் குழந்தைகளிடம் அளித்து அந்தப் பொருட்களை மனதில் ஏற்ற வேண்டும்.


இரண்டாவது நிலை, குறிப்பிட்ட சொற்களை உள்ளடக்கிய அந்தப் பாடப்பகுதியை முதலில் அவர்கள் மௌனமாக வாசிக்க அனுமதிக்க வேண்டும். மூன்றாவது நிலை, உரத்த குரலில் வாசிக்க வேண்டும். அடுத்து, ஒலி எழுப்பி வாசிக்கையில் ஏற்ற இறக்கங்களை இணைத்த வாசிப்பு என்கிற நான்காவது நிலைக்குக் குழந்தையை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். ஐந்தாவது நிலையில், உரத்த வாசிப்பு ஏற்ற இறக்க குரல் கூடவே கை கால்களை அசைக்கின்ற செயல்பாட்டு வாசிப்பு என்கின்ற ஏறக்குறைய சுய நடிப்பை வகுப் பறையில் நிகழ்த்த அனுமதிக்கிறார்.


ஆசிரியர் ஆகும் மாணவர்! - ஆறாவதாக, பாடப்புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு குழந்தையே ஆசிரியராக மாறி அந்தப் பாடத்தை நடத்திக் காட்டுகிறார். இதன்மூலம் அந்தக் குழந்தைப் புத்தகத்திலிருந்த ஒரு பாடத்தை தன் சொந்த அறிவாக மாற்றிக் கொண்டார் என்று டிம் ஹீத் அறிவிக்கிறார். இதன் மூலம் நியூசிலாந்தின் நாடோடி கறுப்பினக் குழந்தைகளின் ஏகோபித்த கதாநாயகனானார். இப்படி தான் பணி செய்த நியூட்டன் பள்ளியில் ஆண்டுதோறும் ஊரையே வரவழைத்து அமர்த்தி ‘தி பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ என்கிற மாணவர்கள் வாசிப்பு திருவிழாவை நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்.


பள்ளி என்பது ஒரு பிரம்மாண்டமான குடும்பம்; முழு பள்ளியுமே ஒரு வகுப்பறையாகக் கருதப்பட வேண்டும்; வயது வித்தியாசம் இன்றி மாணவர்களை ஒருவரோடு ஒருவர் அன்யோன்யமாகப் பழக வைக்க வேண்டும் என்றார்.


ஒரு மாணவர் இன்னொரு மாணவரின் ஆசிரியராக இருப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்து ஒட்டுமொத்த உலகிற்கு அவர் வழிகாட்டுகிறார். ஒவ்வொரு மாணவரும் ஓர் ஆசிரியரே என்பதை அவரது நூல் உரக்கச் சொல்கிறது.


- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459