2020-க்குப்பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/02/2025

2020-க்குப்பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

9720893-chennaihighcourt25020002

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் கடந்த 1997-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த சத்யா என்பவர், பணி வரன்முறை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவு எடுக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இந்த வழக்கு விசாரணையின்போது, தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படமாட்டாது என தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்ததது.


இந்த நிலையில் இந்த வழக்கு ஆர். சுப்பிரமணியன், பி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை செயலாளர் சார்பில், "2020-ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி தற்காலிக பணி நியமனம் செய்வது கைவிடுவது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது" என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், 2020 நவம்பர் 28-ந்தேதிக்குப் பிறகு தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டனர். அத்துடன் தற்காலிக பணி நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.


இந்த உத்தரவுகள் தொடர்பாக மார்ச் 17-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459