பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் நிலையில் அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு இன்று வரை முன்வர மறுக்கிறது. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட அரசு தூண்டுவது கண்டிக்கத்தக்கது.
ஓராண்டுக்கும் மேலாக பேச்சு நடத்தப்படாத நிலையில் வரும் 4-ந் தேதி அடுத்தக்கட்ட பேச்சு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தப் பேச்சுகள் அனைத்தும் காலம் கடத்துவதற்காகத் தான் நடத்தப்படுகிறதே தவிர, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு சிறிதும் இல்லை. ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடு இருப்பது தெளிவாகத் தெரியும்போது நான்கு கட்ட பேச்சுகள் நடத்த எந்தத் தேவையுமில்லை.
பழைய ஓய்வூதியம், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பெரும் தடையாக இருக்கும் அரசாணை 243-ஐ நீக்குதல், உயர்கல்வி கற்பதற்கான ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் உரிமை, அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தகுதித் தேர்வை தேவையற்றதாக அறிவித்து, அதன் காரணமாக வழங்கப்படாமல் இருக்கும் தற்போதைய ஆசிரியர்களின் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் எந்த பேச்சுகளும் இல்லாமல் நிறைவேற்றப்பட வேண்டியவை தான். தமிழக அரசு நினைத்தால் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் 15 கோரிக்கைகளையும் 15 நிமிடங்களில் நிறைவேற்றி விட முடியும். ஆனால், அதற்கான மனம் தான் தமிழக அரசுக்கு இல்லை.
வழிபடத் தகுந்தவர்கள் பட்டியலில் அன்னை, தந்தை ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும்.
எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கக் கல்வி ஆசிரியர்களை மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தும் சூழலுக்கு தள்ளாமல், அவர்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment