ஆசிரியர்கள் கண்டிப்புக்கு எதிராக அரசுப் பள்ளியில் மாணவிகள் போராட்டம் - ஆசிரியர் மலர்

Latest

 




13/08/2024

ஆசிரியர்கள் கண்டிப்புக்கு எதிராக அரசுப் பள்ளியில் மாணவிகள் போராட்டம்

 

 

1294283

செங்கோட்டையில் ஆசிரியர்கள் கண்டிப்பை எதிர்த்து செங்கோட்டை அரசுப் பள்ளியில் மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பிளஸ் 2 கணினி அறிவியல் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்ட் பாட்டிலை வகுப்பறைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது, சென்ட் பாட்டில் கீழே விழுந்து உடைந்துள்ளது. அதில் இருந்து வந்த நெடி காரணமாக 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 7 பேர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.


இந்நிலையில், செங்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து, பள்ளிவாசல் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து சென்று மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவிகளை பார்க்கச் சென்ற தலைமை ஆசிரியர் உள்ளிட்ட சில ஆசிரியர்கள், மாணவிகளை கண்டித்ததாகவும், போதைப் பொருளை பள்ளிக்கு கொண்டு வந்தீர்களா எனக் கேட்டு திட்டியதாகவும் தெரிவித்த மாணவிகள், அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.


போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு ஆதரவாக மாதர் சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இது குறித்து விசாரணை நடத்தி, உரிய நடிவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனிடையே, தலைமை ஆசிரியருக்கும், பள்ளியில் உள்ள சில ஆசிரியர்களுக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக மாணவிகளை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடச் செய்ததாகவும் ஒரு செய்தி உலா வருகிறது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459