புதிதாக 113 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதியா? - தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

10/07/2024

புதிதாக 113 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதியா? - தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்

 


 

1276872

“நாடு முழுவதும் புதிதாக 113 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது” என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.


புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம் ஆகும். அதன்படி, அதற்கான விண்ணப்பங்களை நாடு முழுவதும் இருந்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) பெற்றது. அதில், 113 விண்ணப்பங்கள் புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், 58 விண்ணப்பங்கள் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.


தமிழகத்தைப் பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் கிராமத்தில் தட்சசீலா மருத்துவக் கல்லூரி, விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியில் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூரில் அன்னை மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம் அவனம்பட்டில் ஜே.ஆர்.மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தில் கன்னியாகுமரி மருத்துவ ஆராய்ச்சி மிஷன் ஆகிய கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்து இறுதி முடிவுகளை எடுத்த தேசிய மருத்துவ ஆணையம், அதுகுறித்த ஒப்புகை தகவல், பிற விவரங்கள் இமெயில் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியது.


இதற்கிடையில், சமீபத்தில் புதிதாக 113 கல்லூரிகளை தொடங்க தேசிய அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான தகவல்கள் வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களின் இறுதி முடிவுகள் எடுக்கும்போது அவை அனுமதி அளித்ததாகவும் இருக்கலாம். அனுமதி அளிக்காததாகவும் இருக்கலாம். அதனை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி இருக்கிறோம். புதிதாக தொடங்க அனுமதி வழங்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளின் விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459