சுவையான மட்டன் கொத்துக் கறி சமைப்பது எப்படி - ஆசிரியர் மலர்

Latest

14/04/2024

சுவையான மட்டன் கொத்துக் கறி சமைப்பது எப்படி

 வெயில் காலத்தில் அசைவ உணவுகளில் மட்டன் என்றால் அனைத்து வயதினரும் ருசித்து சாப்பிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அதன் தனி சுவையே ஆகும். மேலும் மட்டன் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அதுவும் மட்டனை அதிகளவு மிளகுத் தூள் சேர்த்து காரசாரமான கொத்துக்கறி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இது சளி தொல்லையை முறித்துவிடும்.

இந்த மட்டன் கொத்துக்கறியை சாதம், சாம்பார், ரசம், சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

மட்டன் வேகவைக்க தேவையானவை :

 • எலும்பில்லாத மட்டன் கொத்துக்கறி – 1/2 கிலோ

 • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

 • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

 • தண்ணீர் – 1/2 கப்

 • உப்பு – சுவைக்கேற்ப

மற்ற பொருட்கள் :

 • பெரிய வெங்காயம் – 2

 • பச்சை மிளகாய் – 3

 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

 • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

 • கொத்தமல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

 • கரம் மசாலா தூள் – 1 டேபிள் ஸ்பூன்

 • மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

 • சோம்பு – 2 டீஸ்பூன்

 • தேங்காய் எண்ணெய் – 1/4 கப்

 • கொத்தமல்லி இலை – சிறிதளவு

 • கறிவேப்பிலை – சிறிதளவு

 • உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் மட்டன் கொத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்து குக்கரில் போட்டு அடுப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து குக்கரை மூடி 12 முதல் 15 விசில் வரை விட்டு இறக்கிக் கொள்ளவும்.

குக்கரில் பிரஷர் தானாக அடங்கும் வரை விட்டுவிடவும்.

அடுத்து அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்த்து தாளித்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக்கொள்ளவும்.

அடுத்து அதில் வேக வைத்த மட்டனை சேர்த்து கலந்து அத்துடன் மிளகாய் தூள், கொத்தமல்லித் தூள் மற்றும் கரம் மசாலா


ஆகியவற்றை சேர்த்து நன்கு தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.

மட்டனில் இருந்து நீர் முற்றிலும் வற்றியதும் அதனுடன் மிளகுத் தூளை தூவி கிளறி கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான மட்டன் கொத்துக்கறி பரிமாற ரெடி.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459