தபால் ஓட்டு யாருக்கு போடப்பட்டது?: அறிய முடியாததால் கட்சியினர் கவலை! - ஆசிரியர் மலர்

Latest

15/04/2024

தபால் ஓட்டு யாருக்கு போடப்பட்டது?: அறிய முடியாததால் கட்சியினர் கவலை!

 Tamil_News_lrg_3600847

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பயிற்சி மையத்தில் தபால் ஓட்டை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதால், தபால் ஓட்டளிப்போர் யாருக்கு ஓட்டளிக்கின்றனர் என்ற விபரத்தை, அரசியல் கட்சியினர் அறிய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.


தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு, தபால் ஓட்டு வழங்கப்படும்.


அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் மையங்களில், ஓட்டுப் பெட்டி வைக்கப்படும். பயிற்சி நிறைவு நாளில், தபால் ஓட்டளிக்க விரும்புவோர், அந்த பெட்டியில் தங்கள் ஓட்டை செலுத்தலாம்.


முற்றுப்புள்ளி


இதுதவிர, மாவட்ட தேர்தல் அலுவலர் அறை முன், ஓட்டுப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் தபால் ஓட்டளிப்பவர்கள், ஓட்டு எண்ணிக்கை அன்று காலை 7:00 மணிக்கு முன் வரை ஓட்டளிக்கலாம்.


இதுதவிர, தபாலிலும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, தங்கள் ஓட்டை அனுப்பலாம்.


இதில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சில அரசியல் கட்சியினர் தபால் ஓட்டளிப்போரை நேரடியாக சந்தித்து, தங்கள் முன்பாகவே தங்கள் கட்சிக்கு ஓட்டளிக்க செய்து, அந்த ஓட்டுகளை மொத்தமாக பெற்று, ஓட்டுப் பெட்டியில் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.


இதன்வழியே எத்தனை தபால் ஓட்டுகள் தங்களுக்கு சாதகமாக வந்துள்ளது என்பதை, அவர்கள் அறிந்து கொள்ள முடிந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இம்முறை தபால் ஓட்டுகளை தபாலில் அனுப்பக் கூடாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


நிர்பந்தம்


மேலும், தமிழகத்தில் தபால் ஓட்டளிப்போர், அவர்கள் பயிற்சி பெறும் மையங்களில், வரும் 16ம் தேதி ஓட்டளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த ஓட்டுகளில் பிற மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய ஓட்டுகளை, ஒரு அலுவலர் உரிய போலீஸ் பாதுகாப்புடன், 17ம் தேதி திருச்சி எடுத்து செல்வார்.


இதுபோன்று ஒவ்வொரு அலுவலரும், தங்கள் மாவட்டத்திலிருந்து ஓட்டுகளை எடுத்துக் கொண்டு திருச்சி செல்வர். அங்கு பிற மாவட்டங்களுக்குரிய ஓட்டுகளை வழங்கி விட்டு, தங்கள் மாவட்டத்திற்குரிய ஓட்டுகளை பெற்று வருவர். இப்பணியை 17ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


பயிற்சி மையங்களில், தபால் ஓட்டளிப்போர் தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்வதாலும், தபால் ஓட்டை வெளியில் எடுத்துச் செல்ல முடியாததாலும், அரசியல் கட்சியினர் யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பணியில் இருப்போர் மட்டும், தபால் ஓட்டை அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஓட்டு எண்ணிக்கை நாளன்று காலை 7:00 மணிக்குள் தங்கள் ஓட்டுகளை அனுப்ப வேண்டும்.


17ல் சிறப்பு ஏற்பாடு

அரசு ஊழியர் கோரிக்கைஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள், தமிழக தலைமை தேர்தல் அலுவலரிடம் அளித்துள்ள மனு:

 ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டுகளை வழங்குவதில், கடும் சுணக்கமும், குளறுபடிகளும் உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான சான்றிதழ் வழங்குதல் மற்றும் தபால் ஓட்டுகளை பதிவிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.போலீசார் தேர்தல் பணிக்கு செல்வதற்கு முன், தங்கள் ஓட்டுகளை போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது போல, வரும் 17ம் தேதி சிறப்பு ஏற்பாடு செய்து, அரசு ஊழியர்கள் ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


போலீசாருக்கு எப்படி?

தேர்தல் பணிக்கு செல்லும் போலீசார், தபால் ஓட்டளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மையங்களில் ஓட்டளித்து வருகின்றனர். சில இடங்களில், தபால் ஓட்டு வந்து சேரவில்லை என்ற புகார் எழுந்தது.இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''விண்ணப்பித்த அனைவருக்கும், தபால் ஓட்டுகள் வழங்கி, அவர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்படும். தேர்தல் பணி சான்றிதழ் பெற்றவர்கள், ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு அளிக்கலாம்,'' என்றார்.

1 comment:

  1. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் போடும் தபால் வாக்குகளை திறந்து பார்த்துக் கொண்டுதான் உள்ளார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459