10-ம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடக்கம்: தமிழகம் முழுவதும் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர் - ஆசிரியர் மலர்

Latest

26/03/2024

10-ம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடக்கம்: தமிழகம் முழுவதும் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்

 1221510

பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.


தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி நிறைவடைந்தது. இத்தேர்வை 7.25 லட்சம் பேர் எழுதினர். பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கியது. சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது.


இதைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. 83 மையங்களில் 46 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடஉள்ளனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியாகும்.


இந்நிலையில், 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் 9.10 லட்சம் பேர், தனி தேர்வர்கள் 28,827 பேர், சிறை கைதிகள் 235 பேர் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 4,107 தேர்வு மையங்களும், தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 4,591 பறக்கும்படைகளும் தேர்வு கண்காணிப்புபணியில் 48,700 ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


தலைவர்கள் வாழ்த்து: இதனிடையே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறுகட்சித் தலைவர்கள் வாழ்த்திஉள்ளனர்.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள என தருமை மாணவச் செல்வங்களே... ஆல் தி பெஸ்ட் (All the best!). நீங்கள்பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்ரும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள். இவ்வாறு அதில்அவர் தெரிவித்துள்ளார்


பாமக தலைவர் அன்புமணி:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் செவ்வாய்கிழமை தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 9.38 லட்சம் பேர் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர். 4,107 தேர்வு மையங்களில் நடைபெறும் இத்தேர்வுகளில் பங்கேற்கும் அனைவரும் சாதனைகளை படைப்பதற்காக எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன்: மாணவச் செல்வங்களுக்குவாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். கவலையும், பயமும் கொள்ளாமல் மன அழுத்தமின்றி தன்னம்பிக்கையுடன் மாணவ - மாணவியர்கள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும்.


பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு அனைத்து வகையிலும் உதவிகளைச் செய்வதோடுஅவர்களுக்கு போதிய தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் ஊட்டி அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதற்கு வழிகாட்டிட வேண்டும்.


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிதலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுஎழுதும் மாணவ, மாணவிகள்அனைவரும் நன்கு தேர்வு எழுதவும், தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் வாழ்த்துகிறேன்.10-ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் கவனம் செலுத்தி, நன்கு தேர்வு எழுத வேண்டும்.பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அனைவரும் தாங்கள் படித்த பாடங்களை நன்கு மனதில் பதிய வைத்து தேர்வு எழுத வேண்டும்.


கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வு எழுதும் குழந்தைகள் எந்த பதட்டமுமின்றி முழு நம்பிக்கையோடு எழுத என் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459