சொத்துவரி பெயர் மாற்ற கட்டணம் உயர்வு! - ஆசிரியர் மலர்

Latest

03/01/2024

சொத்துவரி பெயர் மாற்ற கட்டணம் உயர்வு!

வீடு வாங்கியவர்கள், அதற்கான சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம், 20,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது. 2022 ஏப்ரல் 1ல் சொத்து வரி, 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில், மற்ற கட்டணங்களும் உயர்ந்து வருகின்றன. இதில், சொத்து வரி அடிப்படையில், வீடுகளுக்கான திடக்கழிவு மேலாண்மை கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், *சொத்து வரி பெயர் மாற்ற கட்டணத்தையும், உள்ளாட்சி அமைப்புகள் ஓசையின்றி உயர்த்தி வருகின்றன. நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், சொத்து வரி பெயர் மாற்ற, 500 முதல் 1,500 ரூபாய் வரை என்ற, நிலையான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது. சென்னை தவிர்த்து பிற மாநகராட்சிகளில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, சொத்தின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் வரை என்றால், 1,000 ரூபாய்; 10 லட்சம் ரூபாய் வரை என்றால், 3,000 ரூபாய், 20 லட்சம் ரூபாய் வரை என்றால், 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், சொத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய் வரை என்றால், 10,000 ரூபாய்; ஒரு கோடி ரூபாய் என்றால், 20,000 ரூபாய் வரை கட்டணம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால், பெயர் மாற்ற ஒவ்வொரு ஒரு கோடிக்கும், 20,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள், மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த கட்டணங்களை நிர்ணயிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடாமல், உள்ளாட்சி அமைப்புகள் இந்த கட்டண உயர்வை அமல்படுத்தி வருவதால், சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு செல்லும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459