தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்கான முதல்கட்ட போட்டியான மாவட்ட அளவிலான கண்காட்சி வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: தென்னிந்திய அறிவியல் கண்காட்சி என்பது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 8, 9, 10-ம்வகுப்பு மாணவர்களுக்கான வருடாந்திர நிகழ்வு ஆகும். இதில் அனைத்து தென் மாநிலங்களும் பல்வேறு அறிவியல் கருப்பொருட்களுடன் கூடிய அரங்குகளை அமைக்கும். அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப்படும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெறுபவர்கள் இதில் பங்கேற்பார்கள்.
அந்த வகையில், தமிழகத்தில் இருந்து இதில் பங்கேற்பதற்காக, மாநில அளவில் அதிகபட்சம் 35 அரங்குகள் தேர்வு செய்யப்படும். தனிப்பட்ட வகை (ஒரு மாணவர், ஒரு ஆசிரியர்) பிரிவில் 15 அரங்குகள், குழு வகை (2 மாணவர், ஒரு ஆசிரியர்) பிரிவில் 10 அரங்குகள், ஆசிரியர் வகை (ஒரு ஆசிரியர் மட்டும்) பிரிவில் 10 அரங்குகள் தேர்வு செய்யப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம், பூமி மற்றும் விண்வெளி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல், உயிரியல், உயிரி வேதியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் கண்காட்சி அரங்கு அமைந்திருக்க வேண்டும். மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி டிசம்பர் 27-ம் தேதி நடத்தப்படும். அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள், 2024 ஜனவரி 6-ம் தேதி நடக்க உள்ள மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்கலாம்.
No comments:
Post a Comment