சங்கங்கள் போராட்டக்களம் நோக்கிச் செல்வதற்கு என்ன காரணம்? யார் காரணம்? ஆசிரியர் சங்கம் கேள்வி - ஆசிரியர் மலர்

Latest

11/11/2023

சங்கங்கள் போராட்டக்களம் நோக்கிச் செல்வதற்கு என்ன காரணம்? யார் காரணம்? ஆசிரியர் சங்கம் கேள்வி

 


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


*"ஆசிரியர் கேடயம்"-இயக்க இதழ்*

*நவம்பர்-2023*


*பொதுச் செயலாளர் மடல்!*

***********************

*பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே! வணக்கம்.*


*தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது.கடந்த இரண்டு மாதகாலம் என்பது பள்ளிக்கல்வித்துறையில் போரட்டக்காலமாகவும், போராட்டக்களமாகவும் இருந்து கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 29ல் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் நடத்திய பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற கோட்டை நோக்கிப்பேரணி, டி.பி.ஐ வளாகத்தில்  மூன்று ஆசிரியர் சங்கங்கள் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் தொடர் காத்திருப்புப் போராட்டம், டிட்டோஜாக் கூட்டமைப்பு கடந்த அக்டோபர் 13ல் சென்னையில் டி.பி.ஐ வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப் பின்பு ஆர்ப்பாட்டத்தைப் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டமாக நடத்திய நிகழ்வு என தொடர்ச்சியான கள நிகழ்வுகள் என்பது மாநிலம் முழுதும் ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் கூட சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.*


*முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பள்ளிக் கல்வித்துறையில் இயங்கிவரும் சங்கங்கள் போராட்டக்களம் நோக்கிச் செல்வதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பதைப் பிரச்சனையைத் தீர்க்கவேண்டிய இடத்திலிருப்பவர்கள் உணர்ந்து செயல்பட்டால் இதுபோன்ற களச்சூழலை நிச்சயமாக தவிர்க்கமுடியும். ஆனால், தீர்வு காணக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் கல்வித்துறையில் நாள்தோறும் புதிது புதிதாக உருவாக்கப்பட்டுவரும் பிரச்சனைகளின் தன்மையை, அதன் விளைவுகளை, அதன் பாதிப்புகளை கண்டும் காணாமல் அல்லது புரிந்தும் புரியாமல் இருப்பதாலேயே பள்ளிக் கல்வித்துறையில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆசிரியர்களின் கோரிக்கைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.*


*01.07.2023 முதல் மத்திய அரசு அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வு மாநில அரசு ஊழியர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநில அரசு ஊழியர்களுக்கு மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி மத்திய அரசு அறிவித்த தேதிமுதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி என்பது போராடிப் பெற்ற உரிமை. Same Date, Same Rate என்ற நடைமுறை கொரோனா நோய்த்தொற்றைக் காரணம் காட்டி பறிக்கப்பட்டது. அது தற்போது தான் முடிவுக்கு வந்துள்ளது.*


*அகவிலைப்படி வழங்குவதைக்கூட சிலர் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருமுறை அகவிலைப்படி அறிவிக்கும்போதும் முதலைமைச்சரைச் சந்தித்து நன்றிகூறும் நிகழ்வு என்பது ஒவ்வொருமுறையும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. முன்பெல்லாம் அகவிலைப்படி உயர்வு என்பது ஒரு அரசாணையாக வெளியிடப்படும். அது ஒரு வழக்கமான நிகழ்வாகவே எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இன்று அகவிலைப்படி அறிவிப்பு என்பது ஏதோ புதிய ஊதியக் குழுவை அமல்படுத்த அரசாணை வெளியிட்டதைப் போல் சிலரால் பார்க்கப்படுகிறது.


நன்றி சொல்வது என்பது தனிப்பட்ட சங்கங்களின் அல்லது தனிப்பட்ட நபர்களின் உரிமை. ஆனாலும், அகவிலைப்படி உயர்வுக்கு நன்றி தெரிவித்த ஒரு சிலர் முதல்வரை வானளாவப் புகழ்ந்து அரசு ஊழியர்களுக்கு இந்த அரசு அள்ளிஅள்ளிக் கொடுப்பதாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டி இன்றைய காலச் சூழலில் ஏற்கும்படியாக இல்லை என்பதுதான் உண்மை. அதுதான் இன்றைய நிலையில் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மனநிலை என்பதை அவ்வாறு பேட்டி கொடுத்தவர்கள் உணர்ந்தால் நல்லது. இல்லாவிட்டால் இவர்களது பேட்டியே பொதுமக்கள் மத்தியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது வெறுப்பையும், பொறாமையையும் உருவாக்கிவிடும்.*


*கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலம் முதல் இன்றுவரை பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்பதற்காக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதே நேரத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஜாக்டோ ஜியோ போன்ற கூட்டமைப்புக்கள் தீவிரமான  போராட்டங்களில் ஈடுபடவில்லை என்ற விமர்சனமும் பரவலாக வந்து கொண்டிருப்பதை நாம் மறுக்கவும் முடியாது. அதற்கு என்ன காரணம் என்பதையும் தமிழ்நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், "பொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப் பொய்யும் புரட்டும் பலியாகும்". என்ற நிலை விரைவில் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. எல்லோரையும், எப்போதும் ஏமாற்றிக் கொண்டே இருக்கமுடியாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயல்பட்டால் அவர்களது எதிர்காலத்திற்கு அது நல்லதாய் அமையும்.*


*இன்றைய தி.மு.க  ஆட்சியில் போராட்டம் அறிவித்தால் அல்லது போராட்டம் நடத்தினால் அமைச்சர்கள் முதல் உயர் அலுவலர்கள் வரை அழைத்துப் பேசுகிறார்கள். பேச்சுவார்த்தைகளின் மூலம் நம்பிக்கை ஊட்டுகிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் போராட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதும் அதன் பின்பு பேச்சுவார்த்தையின்படி கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலை என்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. எனவே, இந்த ஆட்சியில் "பேச்சுவார்த்தை" என்பதன் மீதான நம்பகத்தன்மை என்பது கேள்விக்குறியாகி விட்டது. இதற்கு உதாரணமாக கடந்த காலங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டடைமப்போடு மூன்று அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை, டிட்டோஜாக் கூட்டமைப்போடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், கல்வித்துறை இயக்குநர்களும் பலமுறை நடத்திய பேச்சுவார்த்தைகளைக் கூறலாம்.*


*கடந்த 12.10.2023 அன்று டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 அம்சக் கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்ததன் பேரில் அவர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டு 13.10.2023 அன்று நடத்துவதாக அறிவித்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தை பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டமாக  மாற்றிட கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநில டிட்டோஜாக் முடிவு செய்தது. ஆனால், அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் வகையில் இன்றுவரை ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதுபோன்ற நிலை என்பது ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.*


*அதுமட்டுமல்ல, நாள்தோறும் பள்ளிக் கல்வித்துறையில் வெளியிடப்படும் அறிவிப்புகள் ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிரானதாகவும், ஆசிரியர்களின் கோபத்தைக் கிளறிவிடுவதாகவும் உள்ளது என்பதைச் சமீபகால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆசிரியர்கள் பெறும் உயர்கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கும் நடைமுறை பேரறிஞர் அண்ணா ஆட்சிக் காலம் முதல் இருந்தது. அதை 10.03.2020 முதல் நிறுத்திவைத்து கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் 10.03.2020க்கு முன்பு உயர்கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு பழைய முறையில் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்காக சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதற்காக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். தேர்தல் அறிக்கையில் ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்த தி.மு.க. அரசு ஒன்றிய அரசைப் பின்பற்றி உயர்கல்வித்தகுதிக்கு ஊக்கத்தொகையினை வழங்குவதாக கடந்த ஆண்டு ஆணை வெளியிட்டது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அவ்வாறு ஏமாற்றமளித்த தமிழ்நாடு அரசு சமீபத்தில் 10.03.2020க்கு முன்பு உயர்கல்வித் தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை மட்டுமே வழங்கப்படும் என்று மீண்டும் ஆணை வெளியிட்டது என்பது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவதாக உள்ளது. ஊக்க ஊதிய உயர்வு  வழங்கும் விசயத்தில் ஒன்றிய அரசைப் பின்பற்றுவதாகக் கூறும் தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசைப் பின்பற்றி மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை ஏன் வழங்கவில்லை? என்ற கேள்வி எழுகிறது.*


*அதேபோன்று தமிழ்நாட்டில் காலங்காலமாக தொடக்கக் கல்வித்துறையில் பின்பற்றப்பட்டுவரும் ஒன்றிய முன்னுரிமையை


மாற்றி மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் முன்னுரிமையை  நிர்ணயிக்க நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு சமீபத்தில் ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விசயத்தில் நீதீமன்ற உத்தரவை அமல்படுத்தத் துடிக்கும் கல்வித்துறை, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏன் உரிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஒன்றிய முன்னுரிமை என்பது காலங்காலமாக தொடக்கக்கல்வித்துறையின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்துள்ளது என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்திட வேண்டும்.*


*மேலும், ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மிகத் தாமதமாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

TEACHERS NEWS
தமிழ்நாடு அரசு அவ்வாறு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் சில மாவட்டங்களில் மற்றும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பட்டியலைத் தயார் செய்திட கல்வித்துறை அதிகாரிகள் கீழ்நிலை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருப்பது என்பது அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறாக உள்ளது. இந்நிலை ஆசிரியர்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.*


*அதேபோன்று தேசியக் கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரிப்போம் என்று கூறும் தமிழ்நாடு அரசு, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க நீதியரசர். முருகேசன் அவர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்து அதனுடைய பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பல கூறுகளை தமிழ்நாட்டில் அமல்படுத்த முற்படுவது கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020 ல் 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு அரசும் அதைப்பின்பற்றி 3,6,9 வகுப்புகளுக்கு மாநில அளவிலான அடைவுத் தேர்வை நடத்தி முடித்துள்ளது.. அதுமட்டுமல்ல 1 ஆம் வகுப்பு முதலே மாநில அளவில் ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தேர்வு நடத்தும் முறையையும் தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் தேசியக் கல்விக் கொள்கையின் பல உட்கூறுகளை வேறு பெயர்களில் மாநில அரசு அமல்படுத்துகிறதோ என்ற சந்தேகம் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.*


*மேலும், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமைப்படி நேரடியாகப் பணி வழங்குவதை விடுத்து அரசாணை:149ன்படி ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் மீண்டும் ஒரு தேர்வு நடத்தி 2222 பட்டதாரி ஆசிரியர்களைப் பணிநியமனம் செய்யப்போவதாக வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு, அரசாணை:149ஐ இரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையைப் புறக்கணிப்பதாக உள்ளது. இந்த அறிவிப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர் பணி நியமனத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*


*கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கி தற்போதைய தி.மு.க ஆட்சிவரை கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நிரந்தரப் பணியிடத்தில், காலமுறை ஊதியத்தில் ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்பட வில்லை. இது தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத ஒரு சூழ்நிலையாகும். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆரம்பப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வில் சென்றுள்ளார்கள். அந்த பணியிடங்களை எல்லாம் காலியாகவே வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் கல்வித் தரத்தை எவ்வாறு உயர்த்த முடியும்? என்பதை தொடர்புடையவர்கள் சிந்திக்க வேண்டும்.*


*தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12000 , பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15000 , மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.இது ஒரு மிகப்பெரிய உழைப்புச் சுரண்டல். சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் ரூ.18000 என நிர்ணயிக்கப்பட்டிருக்கும்போது, அதிகம் படித்த ஆசிரியர்களுக்கு இவ்வாறு ஊதியம் வழங்குவது என்பது எந்தவகையில் நியாயம்? இன்றைய நிலையில் கிராமங்களில்கூட கூலி வேலைக்குச் செல்பவர்கள் நாளொன்றுக்கு நானூறு ரூபாய், ஐநூறு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு வரமாட்டார்கள்.  ஆனால,உயர்ந்த கல்வித் தகுதி பெற்ற ஆசிரியர்கள் கௌரவமாக வாழ்க்கை நடத்துவதற்கு போதுமான ஊதியம் வழங்க வேண்டாமா? ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியம் ஆசிரியர் பணியின் மீது படித்தவர்களுக்கு ஒரு ஈர்ப்பை உண்டாக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.*


*மேற்கண்டவாறு தமிழ்நாட்டு ஆசிரியர்களை, மாணவர்களை,  கல்வியைப் பாதிக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பள்ளிக் கல்வித்துறை தனது செயல்களை மாற்றிச் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமூக நலன் காக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே நமது பெருவிருப்பமாகும். அவ்வாறு செய்யவில்லையென்றால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சம்மந்தப்பட்டவர்களே பொறுப்பாக நேரிடும். களப்போராட்டங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.*

***********************

*தோழமையுடன்*

*ச.மயில்*

*பொதுச் செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459