சொந்த செலவில் பசுமை பள்ளி உருவாக்கிய தலைமை ஆசிரியர் - ஆசிரியர் மலர்

Latest

22/10/2023

சொந்த செலவில் பசுமை பள்ளி உருவாக்கிய தலைமை ஆசிரியர்


சகாய தைனேஸ்
சிவகங்கை அருகே தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து விளையாட்டு மைதானம், அழகுத் தோட்டம் என ஓர் பசுமை பள்ளியையே தலைமை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். காளையார்கோவில் ஒன்றியம் முத்தூர் வாணியங்குடி ஊராட்சி வீரமுத்துப்பட்டி குக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. போக்குவரத்து வசதி குறைந்த மிகவும் பின்தங்கிய பகுதியான இங்கு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது.


அக்கிராமத்தைச் சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தலைமை ஆசிரியர் சகாய தைனேஸ் தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து வசதி குறைவில்லாத பசுமைப் பள்ளியாக மாற்றியுள்ளார். இங்கு சறுக்கல், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களுடன் பூங்காவை உருவாக்கியுள்ளார். இந்தப் பூங்கா பசுமையாக இருப்பதோடு சிங்கம், யானை போன்ற விலங்குகளின் சிலைகள் உள்ளன.


சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், டிவி, மின்தடை ஏற்படாமல் இருக்க யுபிஎஸ் வசதி உள்ளது. சுற்றுச்சுவர், பள்ளிச் சுவர்களில் தலைவர்களின் படங்கள், பாடம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. நூலக வசதி, கழிப்பறைக்குச் செல்லும் மாணவர்களுக்கு வெயில் படாதபடி பாதையின் இருபுறமும் மரங்கள் உள்ளன.


ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் உள்ள விளையாட்டு பூங்கா.

வகுப்பறைகளில் தலைவர்களின் புகைப்படங்கள் ஓவியர்கள் மூலம் வரைந்து, பிரேம் செய்து மாட்டியுள்ளனர். பள்ளிக்கு முன்பாக புல்வெளி, உண்பதற்கு தனி இடம், கைகழுவ வசதி, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, கால்பந்து மைதானம், மாணவர்களுக்கு வட்ட மேஜைகள், இருக்கைகள் என தேவையான அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளன. தொடக்கப் பள்ளியிலேயே இவ்வளவு வசதியா என்று கேட்கும் அளவுக்கு தலைமை ஆசிரியர் பல்வேறு வசதிகளை செய்துள்ளார்.இது குறித்து சகாய தைனேஸ் கூறியதாவது: பள்ளியில் நான் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள்தான் இருந்தன. முதலில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுத்தேன். இக்கிராம மக்கள் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களாக உள்ளதால் நன்கொடை பெற முடியவில்லை.இதையடுத்து நானே படிப்படியாக செலவழித்து வசதிகளை ஏற்படுத்தினேன் . இதுவரை ரூ.4 லட்சம் வரை செலவழித்துள்ளேன். பள்ளி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள், பூச்செடிகள் உள்ளன. மாலையில் பள்ளி முடிந்ததும் அவற்றுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டுத்தான் செல்வேன். அதனால் பள்ளி பசுமையாகக் காட்சியளிக்கிறது.


ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வகுப்பறை.

மாணவர்களுக்குப் படிப்பைத் தவிர, சிலம்பு, கரோத்தே போன்றவையும் கற்றுக் கொடுக்கிறோம். மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமையாக உள்ளனர். வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் பாடும் ஆரோக்கிய சக்கர பாடல் நான் எழுதியது.


அதில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து ஆரோக்கிய விஷயங்களும் உள்ளன


எங்கள் பள்ளியில் மூன்று விதமாக சீருடைகளை மாணவர்கள் அணிகின்றனர். எங்கள் பள்ளி புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் இக்கிராமத்தில் எழுத, படிக்கத் தெரியாத 20 பேரை எழுத, படிக்க வைத்தோம். இதற்காக மாநில அளவில் எங்கள் பள்ளி முதலிடம் பெற்று சில மாதங்களுக்குள் விருது பெற்றோம்.`மாணவர்கள் மனசு' என்ற பெட்டி வைத்துள்ளோம். இதில் மாணவர்கள் தங்களது குறை, நிறைகளை எழுதி வைக்கலாம். மாணவர்களும் முழு ஒத்துழைப்புத் தருகின்றனர். எங்கு சென்றாலும் வரிசையாகச் செல்வர். காலணிகளை வரிசையாக அடுக்கி வைப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459