தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நிறுத்தப்படாது - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

26/05/2023

தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நிறுத்தப்படாது - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு

 


அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக துணை

வேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார்.


Join Telegram


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கில வழியில் பொறியியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ் வழியிலான இயந்திரவியல், கட்டிடவியல் பாடப் பிரிவுகளில் சமீபகாலமாக மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதையடுத்து 11 உறுப்புக் கல்லூரிகளில், சேர்க்கை குறைந்த பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.


இதையடுத்து தமிழ்வழி பாடப் பிரிவுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அதன் துணைவேந்தர் ஆர்.வேல் ராஜ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழ்வழி பாடப்பிரிவுகளில் 10-க்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள கல்லூரிகளில் தற்காலிகமாக சேர்க்கையை நிறுத்திவைக்க ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவானது. தமிழ்வழி படிப்புகளை நீக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. பொறியியல் படிப்புகளில் இயந்திரவியல், கட்டிடவியல் பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் புதிய பாடங்களை அறிமுகப்படுத்தவும், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. அதை சிலர் தமிழ்வழிக் கல்வியை புறக்கணிப்பது போல் தவறாகப் புரிந்து கொண்டனர்.


தற்போது உயர்கல்வித் துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி 11 உறுப்புக் கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகள் நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பு திரும்பப்பெறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு, கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கு ஆர்வம் காட்டப்படுவதால் சில கல்லூரிகளில் சேர்க்கை இடங்களை அதிகரித்துள்ளோம்.


அனைத்து பாடப் புத்தகங்களையும் தமிழில் மாற்ற ஏஐசிடிஇ நிதி அளித்துள்ளது. இந்த பணி முடிந்தவுடன் அனைத்து பொறியியல் பாடப்பிரிவுகளும் தமிழ் மொழியிலும் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459