உயர் ரத்த அழுத்த நோயால் இந்தியாவில் 20 கோடி மக்கள் பாதிப்பு - ஆசிரியர் மலர்

Latest

21/05/2023

உயர் ரத்த அழுத்த நோயால் இந்தியாவில் 20 கோடி மக்கள் பாதிப்பு

 stress.jpg?w=330&dpr=3

மிகப் பெரும் உயர் ரத்த அழுத்த நோயை எதிர்கொண்டிருக்கிறது இந்தியா. உயர் ரத்த அழுத்தத்தால் இந்தியாவில் 20 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீரிழிவு நோயாலும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7.5 கோடி பேரை 2025-க்குள் நிலையான சிகிச்சையில் இணைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் 75/25 என்ற புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தொற்றா நோய்களுக்கு எதிராக உலகத்தில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய முயற்சி இதுவாகும். 


'ஹைப்பர்டென்ஷன்' (உயர் ரத்த அழுத்தம்) என்றால் என்ன? 


'ஹைப்பர்டென்ஷன்' எனும் உயர் ரத்த அழுத்தம், தமனி சுவர்கள் மீது அதிகமான விசையை செலுத்துகிறது. ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவுக்கு அதிகமானால் அது உயர் ரத்த அழுத்தம் எனப்படுகிறது. கடுமையான சூழ்நிலைகளில் இது 180/120 வரை செல்லும். 


அறிகுறிகள் 


உயர் ரத்த அழுத்தம் பொதுவாக அறிகுறிகள் அற்றது. எனினும் மிகவும் அதிகமாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதிக தலைவலி, நெஞ்சு வலி, தலைச்சுற்றல், மூச்சுவிட சிரமம், குமட்டல், வாந்தி, மங்கலான கண் பார்வை அல்லது பார்வையில் மாற்றம், கவலை, காதுகளில் சத்தம் கேட்பது, மூக்கில் ரத்தம், அசாதாரண இதயத் துடிப்பு இருக்கும். 


இறப்பு விகிதம் 


இந்தியாவில் 20 கோடி பேரில் 12% பேர் மட்டுமே உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இது ரத்த அழுத்தத்திற்கு சிறந்த சிகிச்சை தேவை என்பதைக் காட்டுகிறது.  


மேலும், உயர் ரத்த அழுத்தம் இந்தியாவில் இளைஞர்களின் மரணத்திற்கான முக்கியமான காரணியாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி இடது வென்ட்ரிகிளை தடித்து பெரிதாக்குகிறது. இது மாரடைப்பு, இதய செயலிழப்பு, மாரடைப்பால் மரணம் ஏற்படக் காரணமாகிறது. 


இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? 


இந்திய உணவுகளில் சோடியம் அதிகம் இருப்பது, மரபியல் காரணங்கள், சமூக பொருளாதாரக் காரணிகள், வாழ்க்கைமுறைத் தேர்வுகள் ஆகியவை இந்தியாவில் உயர் ரத்த அழுத்தத்தில் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்திய மக்கள் தொகையில் 30% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது அவர்களின் குறிப்பிடத்தக்க ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


இளம் வயதினர் அதிகம் பாதிப்பு 


இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம் இளம் வயதினரிடையே பரவலாக அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை நிபுணர்கள் கூற்றுப்படி 10% லிருந்து 30% ஆக அதிகரித்துள்ளது. புகைபிடித்தல், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. 


விழிப்புணர்வு 


இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை குறைவாகவே உள்ளது. நகர்ப்பகுதிகளில் 33%, ஊரகப் பகுதிகளில் 25% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஊரகப் பகுதியில் கால் பங்கு மக்கள் மற்றும் நகரங்களில் 42% பேர் மட்டுமே அவர்களின் நிலைமை குறித்து விழிப்புணர்வு கொண்டிருக்கின்றனர். 


அதுபோல சிகிச்சையைப் பொருத்தவரை ஊரகப்பகுதியில் 25%, நகர்ப்புறத்தில் 38% இந்தியர்கள் மட்டுமே முறையாக இதற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


பெரும்பாலானோருக்கு இதுகுறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. 


முன்னெடுப்புகள் 


உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முன்னெடுப்பில் 2025 ஆம் ஆண்டுக்குள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 7.5 கோடி பேருக்கு நிலையான சிகிச்சை அளிக்க மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 


இதற்காக 40,000 ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு பயிற்சியளிக்க உள்ளது.


உயர் ரத்த அழுத்த பரிசோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சை ஆகியவற்றுக்கு ஷஷக்த் - 'shashakt' என்ற தளத்தைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. 


அடுத்தகட்ட முன்னெடுப்பு


ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் உயர் இரத்த அழுத்தத்தை கையாள்வதற்கும் சுகாதார நிபுணர்கள், கொள்கைகளை உருவாக்குபவர்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459