12 மணி நேர வேலை சட்டமசோதா வாபஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

01/05/2023

12 மணி நேர வேலை சட்டமசோதா வாபஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 


உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மே தினப் பூங்காவில் உள்ள மே நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 .Join Telegram

உழைப்பாளர் தின நிகழ்ச்சியில் அனைத்து தொமுச பேரவை இணைப்பு சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க உறுப்பினர்களும் கருப்பு சிவப்பு உடை அணிந்து வர வேண்டும் என்று தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்து இருந்தார். அதன்படி ஆண்கள் சிவப்பு சட்டை அணிந்தும், பெண்கள் சிவப்பு நிற புடவை அணிந்தும் வருகை தந்திருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சிவப்பு நிற சட்டை அணிந்து வந்திருந்தார். 

 

 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தொழிலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். உயிரிழந்த தொழிலாளர்களுக்கு வீர வணக்கம். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் 1889 ஆம் ஆண்டு கூடி மே 1 ஆம் தேதியை தொழிலாளர் வர்க்க உலக நாளாக அறிவித்தனர். சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தலைமையில் முதல் மே தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது. சோவியத் சென்று வந்த பிறகு பெரியாரும் மே தினத்தை கொண்டாட தொடங்கினார். திமுக ஆட்சியில் பாட்டாளி வர்க்க சிந்தனையே மேலோங்கி இருக்கும். 

 

1969 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றதும் தொழிலாளர் நலத்துறையை உருவாக்கினார். மே 1 நாளை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாக கருணாநிதி அறிவித்தார். தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாப்பதற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார். 1990 ஆம் ஆண்டு மே தின நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்த பூங்காவிற்கு மே தின பூங்கா என பெயர் வைத்தவரும் கருணாநிதி தான். மே தினத்தையொட்டி நினைவுச் சின்னம் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததும் நிறைவேற்றுவோம் என அறிவித்தவர் கருணாநிதி. 

 

அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் எல்லாருக்கும் எல்லாம் என்றபடி திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

 

சமீபத்தில் சர்ச்சைக்குரிய சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. பெருமுதலீடுகளை ஈர்க்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவே அந்த சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டது. அனைத்து தொழிற்சாலைகளுக்குமான சட்டமுன்வடிவு அல்ல. தொழிலாளர்களை பாதுகாக்கும் அம்சங்கள் பல இருந்தன. 

 

ஆனால் சில சந்தேகங்கள் தொழிற்சங்கங்களுக்கு இருந்தன. திமுக தொழிற்சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு பாராட்டுகிறேன். உடனடியாக அனைத்து தொழிற்சங்க தோழர்களை கோட்டைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அதனை திரும்பப் பெற்றுள்ளது தான் திமுக அரசு. இதனை அவமானமாகக் கருதவில்லை. பெருமைப்படுகிறேன். திரும்ப பெறப்பட்டுள்ள செய்தி விரைவில் தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459