எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் பள்ளியில் புகுந்து ஆசிரியர்களை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
மனு
எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் கிராம மக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்து தொடக்கப் பள்ளியில் சுமார் 21 குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கு 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 21-ந் தேதி பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, எங்களது ஊரைச் சேர்ந்த முனியசாமி, மாரிச்செல்வி, சிவலிங்கம், செல்வி ஆகிய 4 பேரும் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்து அங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியை குருவம்மாள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பாரத் ஆகியோரை ஓட ஓட விரட்டி கொடூரமாக தாக்கியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.
குண்டர் சட்டம்
இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த நபர்களால் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், அங்கு படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.
மேலும் முனியசாமி மீது பல வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட நபர் பள்ளிக்குள் கூலிப் படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளது. இதனால் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது.
எனவே, இந்த நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் ஆசிரியர்கள், குழந்தைகக்கும் பாதுகாப்பு கிடைக்கும். அதுவரை எங்களது குழந்தைகளை பள்ளிக்கு செல்ல அனுமதிக்க இயலாத நிலை உள்ளது என்று கூறி உள்ளனர்
No comments:
Post a Comment