பள்ளி விடுமுறை அறிவிப்பும் பிறகு ரத்தும்; ஏன் இந்தக் குழப்பம்? - ASIRIYAR MALAR

Latest

Education News

27/09/2022

பள்ளி விடுமுறை அறிவிப்பும் பிறகு ரத்தும்; ஏன் இந்தக் குழப்பம்?

School_Students_EDi

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாள்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அதிகாலையில் அறிவிப்பு வெளியாகி, பிறகு அது ரத்து செய்யப்பட்டது.


இரவு முழுவதும் கனமழை பெய்ததால், அதிகாலைலேயே இவ்விரு தாலுகாவில் இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.


அது தொடர்பான செய்திகள் அதிகாலை முதலே செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தது. பிறகு, சற்று நேரத்தில், காலாண்டுத் தேர்வு நடைபெற்று கொண்டிருப்பதால் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது.


அதாவது, காலாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது இவ்வாறு ஒரு சில தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக தகவல் வந்ததால், அந்தந்த தாலுகாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும் பெற்றோரும் மிகுந்த குழப்பம் அடைந்தனர்.


இதற்கிடையே காலாண்டுத் தேர்வு குறித்து கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். காலாண்டுத் தேர்வு நடைபெறுவது அறிந்த பிறகே, மாவட்ட நிர்வாகம் விடுமுறையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.


இந்த தகவல் மாணவ, மாணவியர்களை எந்த நேரத்துக்கு சென்றடைந்திருக்கும், அவர்கள் உரிய நேரத்துக்குள் பள்ளிக்குச் சென்றிருப்பார்களா? அந்தந்தப் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் உரிய நேரத்துக்குள் செய்யப்பட்டிருக்குமா? என்ற பல கேள்விகளை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459