புகைபிடித்து மாணவிகள் மீது ஊதிதள்ளிய அரசு பள்ளி மாணவரை தண்டித்த ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட் ; 2 பேர் டிரான்ஸ்பர் - ஆசிரியர் மலர்

Latest

24/09/2022

புகைபிடித்து மாணவிகள் மீது ஊதிதள்ளிய அரசு பள்ளி மாணவரை தண்டித்த ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட் ; 2 பேர் டிரான்ஸ்பர்

 ஆரணி அருேக பள்ளி மாணவனை தாக்கியதாக 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கமும், 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றமும் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


மாணவனை தாக்கிய ஆசிரியர்கள்


ஆரணி அருகே சேவூர் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவர் நண்பர்களுடன் சிகரெட் பிடித்து, மாணவிகள் மீது புகை விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் ஆசிரியர்களிடம் புகார் செய்தனர்.


அதன்பேரில் ஆசிரியர்கள் ஜெ.திலீப்குமார், கே.வெங்கடேசன், ஜெ.நித்தியானந்தம், பி.பாண்டியன் ஆகியோர் மாணவனை கண்டித்து தாக்கியதாக கூறப்படுகிறது.


இதில் காயம் அடைந்த மாணவன் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


போராட்டம்


இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் மாணவன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாணவனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளியில் குவிக்கப்பட்டனர். உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் கோ.சந்தோஷ் ஆகியோர் விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


பணியிடை நீக்கம்


அதனைத்தொடர்ந்து  ஆசிரியர்கள் ஜெ.திலீப்குமார், கே.வெங்கடேசன் ஆகிய இருவரை பணியிடை நீக்கமும், ஜெ.நித்தியானந்தம் கேளூர் அரசு பள்ளிக்கும், பி.பாண்டியன் முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் பணியிட மாற்றமும் செய்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உத்தரவிட்டார்.


இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459