திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: குடி செயல் வகை
குறள் : 1027
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
பொருள்:
தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.
பழமொழி :
The fearless goes into the assembly.
அச்சம் இல்லாதவர்கள் அரங்கத்தில் ஏறுவார்கள்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நமது பேச்சும் நடத்தையும் நமது வாழ்க்கை வயலில் நாம் விதைக்கும் விதைகள்.
2. நல்ல விதைகள் நல்ல பலனைத் தரும். எனவே நல்ல விதைகளையே விதைப்பேன்
பொன்மொழி :
நீங்கள் பெருங்கடலில்
சிறுதுளி அல்ல..
சிறுதுளியில் முழு கடல், கையளவும் கடலளவும் கடமையில் உள்ளது..!
பொது அறிவு :
1.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது?
இந்தியா.
2. 50 அடிக்கு மேல் வளரும் புல் இனத்தைச் சேர்ந்த தாவர இனம் எது ?
மூங்கில்.
English words & meanings :
Satch-el - a small bag. Noun. சிறு புத்தகப் பை. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
தைராய்டு சுரப்பு அதிகமானால் உடல் எடை குறையும். உடல் சோர்வாக இருக்கும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால் உடல் எடை அதிகரிக்கும். இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படும். ஒருவிதமான எரிச்சல், பதற்றம் உருவாகும்
NMMS Q 42:
ஒரு கடிகாரத்தில் நேரமானது 12 மணி 05 நிமிடமாக காட்டுகிறது. அக்கடிகாரத்தின் முன் கண்ணாடியை பொருத்தும்போது கண்ணாடி பிரதிபலிக்கும் நேரம் என்ன?
விடை: 11 மணி 55 நிமிடங்கள்
நீதிக்கதை
கழுதையின் தன்னம்பிக்கை
ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.
காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.
அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.
ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.
இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.
கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.
வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.
நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும். இத்தோடு நம் கதை முடிந்தது என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.
No comments:
Post a Comment