மாணவர்கள் காலை 7 மணிக்கு பள்ளி செல்லும்போது நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏன் 9 மணிக்கு வேலையை துவங்கக்கூடாது'' என உச்சநீதிமன்றம் கேள்வி - ஆசிரியர் மலர்

Latest

15/07/2022

மாணவர்கள் காலை 7 மணிக்கு பள்ளி செல்லும்போது நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏன் 9 மணிக்கு வேலையை துவங்கக்கூடாது'' என உச்சநீதிமன்றம் கேள்வி

 ‛‛மாணவர்கள் காலை 7 மணிக்கு பள்ளி செல்லும்போது நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏன் 9 மணிக்கு வேலையை துவங்கக்கூடாது'' என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை என்பது காலை 10.30 மணிக்கு தான் துவங்கும் வழக்கம் உள்ளது. காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணை துவங்கும் நிலையில் மாலை 4 மணி நடைபெறும். இதில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒரு மணி நேர உணவு இடைவேளையாகும்.


முன்பே துவங்கிய விசாரணை


இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தின் ஒரு அமர்வு திடீரென்று முன்கூட்டியே வழக்கு விசாரணையை துவங்கியது. நீதிபதி யுயு லலித் தலைமையில் நீதிபதிகள் எஸ் ரவீந்திர பட், சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை விசாரணையை ஒருமணிநேரம் முன்னதாக துவங்கியது. இந்த அமர்வு காலை 9:30 மணிக்கு விசாரணையை துவங்கியது.


நீதிபதி கருத்து


இதுபற்றி நீதிபதி யுயு லலித் கூறுகையில், ‛‛நாம் காலை 9 மணிக்கு நீதிமன்ற நடைமுறைகளை துவங்க வேண்டும். மாணவர்கள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் நிலையில் நாம் ஏன் முன்கூட்டியே நீதிமன்றத்தை துவங்கக்கூடாது. இதை நான் முன்கூட்டியே கூறி வருகிறேன். இது நல்ல விஷயமாகும்.


கோப்புகள் படிக்க அதிக நேரம்


நீதிமன்ற அமர்வுகள் காலை 9 மணிக்கு துவங்கி 11.30 மணி வரை விசாரணையை தொடரலாம். அதன்பிறகு 30 நிமிட இடைவெளிக்கு பின் மீண்டும் 12 மணிக்கு துவங்கி மதியம் 2 மணிக்கு முடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாலை வேளையில் அடுத்த நாள் தொடர்புடைய வழக்கின் கோப்புகளை படிக்க அதிக நேரம் கிடைக்கும்'' என்றார். இந்த முன்கூட்டிய விசாரணைக்கு முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். காலை 9.30 மணி என்பது நேரம் நீதிமன்றம் துவங்க ஏற்ற நேரம் என அவர் கூறினார்.


அடுத்த தலைமை நீதிபதி?


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள என்வி ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் முடிய உள்ளது. இதையடுத்து நாட்டின் அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான போட்டியில் யுயு லலித்தும் உள்ளார். இந்நிலையில் தான் அவர் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459