மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படும் 2,500 பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்:அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - ஆசிரியர் மலர்

Latest

23/07/2022

மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படும் 2,500 பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்:அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி


ராமநாதபுரம்: தமிழகத்தில் வகுப்பறைகள் இன்றி மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படும் 2,500 பள்ளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில், வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி கற்ற வயது வந்தோர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனை தொடக்க விழா இன்று நடைபெற்றது. அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்கி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: “வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளிக்கு செல்லாத எழுதறிவற்றவர்களுக்கு எழுத்துக்கூட்டி படிக்க கற்றுக்கொடுக்கப்படுகிறது. நாட்டில் கொண்டுவரப்பட்ட பசுமைப்புரட்சி, வெண்மைப் புரட்சி, தொழிற்புரட்சி, தொழில்நுட்ப புரட்சி எதுவென்றாலும் எளிதில் கிராமப்புறங்களை சென்றடையவில்லை. அதற்கு காரணம் கிராமப்புறங்களில் கல்வி கற்காததே. அதனால் தான் தமிழக முதல்வர் கிராமப்புறங்களில் கல்வி கற்காத முதியோருக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டார். . முதல்வர் கடந்தாண்டு 3.10 லட்சம் பேர் இலக்கு நிர்ணயித்தார். ஆனால் இயக்குநரின் முயற்சியால் 3.19 லட்சம் பேருக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுத்துள்ளோம். இந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட 4.80 லட்சம் பேர் என்பதையும் கடந்து இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வோம். நாடு முழுவதும் 25 சதவீத மக்கள் கையெழுத்திட, எழுதப்படிக்கத் தெரியாமல் உள்ளனர். வயதானவர்களுக்கு வாசிப்பு பழக்கம் இருந்தால் தனிமையை வெல்லலாம்” என்றார். ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அங்கு ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்டு மாணவர்களிடம் கேள்விகள் கேட்டார். பின்னர் அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகள் தரம் உயர்த்த வேண்டும், வகுப்பறை வசதிகள் வேண்டும் என்பதை ஆராய்ந்துள்ளோம். இந்தாண்டிற்கு ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அதில் ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட உள்ளது. இந்நிதியில் அந்தந்த மாவட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகளிடம் எந்தெந்த பள்ளிகளுக்கு கட்டிட வசதி வேண்டும் என கேட்டறிந்து, அதை முதற்கட்டமாக நிறைவேற்ற முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 10031 பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் 2,500 பள்ளிகளில் வகுப்பறைகள் இன்றி மரத்தடியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இவற்றிற்கும் முன்னுரிமை கொடுத்து கட்டிடம் கட்டிக்கொடுக்கப்படும். மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி இல்லை என எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். அறுபது சதவீதம் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது, மீதி விரைவில் வழங்கப்படும். பள்ளிக்குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அடுத்த குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது. பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முதல்நாள் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் அறிவுரை வழங்கினார். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் 3,000 மாணவர்களின் சான்றிதழ் அழிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி மாணவர்களுக்கு அருகிலுள்ள அரசு, தனியார், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது” என்றார். விழாவிற்கு ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்க இணை இயக்குநர் சி.அமுதவல்லி வரவேற்றார். இயக்குநர் பெ.குப்புசாமி திட்ட விளக்க உரையாற்றினார். விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், நவாஸ்கனி எம்பி, ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் பேசினர். கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) கே.ஜெ.பிரவீன்குமார், பரமக்குடி எம்எல்ஏ செ.முருகேசன், முகம்மது சதக் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஹாமீது இபுராகீம், இயக்குநர் ஹபீப் முகம்மது, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திசைவீரன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி, மாயாகுளம் ஊராட்சி தலைவர் சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமைச்சர் ஆய்வு: கீழக்கரை நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒன்று முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வரும் எண்ணும், எழுத்தும் என்ற வகுப்பை, மாணவர்களுடன் தரையில் அமர்ந்து பார்வையிட்டார். அதனையடுத்து 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறையில் அறிவியல் பாடம் நடத்தியதை பார்வையிட்டு மாணவர்களிடம் கேள்வி கேட்டார். மாணவர்கள் சரியான பதில் அளித்ததால், அங்குள்ள மாணவர்களையும், ஆசிரியர்களையும் அமைச்சர் பாராட்டினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459