தேசிய கல்வி கொள்கை விவகாரம் ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு - ஆசிரியர் மலர்

Latest

22/06/2022

தேசிய கல்வி கொள்கை விவகாரம் ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

'தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வற்புறுத்துவது, தமிழக மக்களுக்கு பாதகமாக இருக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள தேசிய கல்வி கொள்கையை, தமிழகத்தில் அமல்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் இளையராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.


உயர் கல்வி ஆய்வு

இந்த வழக்கில், தலைமைச் செயலர், உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறை சார்பில், உயர் கல்வித் துறை முதன்மை செயலர் தாக்கல் செய்த பதில் மனு:அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். உயர் கல்வி ஆய்வு அறிக்கையின்படி, தமிழகத்தில் தான், 51.4 சதவீதம் என, அதிக எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை உள்ளது.தேசிய கல்வி கொள்கையின் முக்கிய நோக்கமே, 2035ல் மாணவர் சேர்க்கையை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பது தான். இதில், தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோக்கி செல்கிறது.



இடைநிற்றல் இல்லை

தமிழகத்தில் உள்ள கல்வி முறை சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வற்புறுத்துவது, மக்களுக்கு பாதகமாக இருக்கும்.இலவச கல்வி, மதிய உணவு, இலவச புத்தகம், சீருடை, சைக்கிள், மடிக்கணினி போன்ற திட்டங்களால், பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த திட்டங்களால், பள்ளி மற்றும் கல்லுாரியில் இடைநிற்றல் இல்லை.



நிபுணர்கள் குழு

தமிழகத்தில், பள்ளி மற்றும் உயர் கல்விக்கு என, தனி அமைச்சகம் உள்ளது. சரியான நிர்வாக முறையால், அனைத்து திட்டங்களும், வளர்ச்சிக்கான செயல்களும் அமல்படுத்தப் படுகின்றன. தமிழகத்துக்கான சிறந்த கல்வி கொள்கையை வகுக்க, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் கல்வியாளர்கள், நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப் பட்டு உள்ளது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கு விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி தலைமையிலான அமர்வு தள்ளி வைத்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459