கேள்வித்தாள் மீண்டும் வெளியானதா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

04/04/2022

கேள்வித்தாள் மீண்டும் வெளியானதா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை சந்திப்பதற்கு வசதியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கண்ட வகுப்புகளுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் திருப்புதல் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை முதல் திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. அந்த தேர்வு நடக்கும் போதே இடையில் கேள்வித்தாள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, கேள்வித் தாள் வெளியாக வாய்ப்பாக இருந்த பள்ளிகள் மற்றும் அந்த பணியில் பொறுப்பில் இருந்த ஆசிரியர்கள் மீது பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கியது. மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான தேர்வுகள் மற்றும் கணினி அறிவியல், சிறப்பு தமிழ், புள்ளியியல் தேர்வுகளும், வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கான 4 தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் பாடங்களுக்கான தேர்வு இன்று நடக்க இருக்கிறது. 

இவற்றில் கணக்கு பாடத்துக்காக தயாரித்து வைத்திருந்த 4 கேள்வித்தாள் மாதிரிகளில் ஒரு கேள்வித்தாள் மாதிரி மட்டும் வெளியாகி இணைய தளத்தில் உலா வருகிறது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து விசாரித்து வருகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும்போது,கணக்கு பாடத்துக்கு நடத்தப்பட உள்ள தேர்வுக்காக 4 மாதிரி கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று கசிந்துள்ளதாக தெரிகிறது. அதனால் மற்ற கேள்வித்தாள்களை வைத்து தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் பொதுத்தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அதனால் மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை, இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459