பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் நாட்களை பணிநாட்களாக கருத வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

23/03/2022

பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் நாட்களை பணிநாட்களாக கருத வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் நாட்களை பணிநாட்களாக கருத வேண்டுமென முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமாருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: 

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மாவட்டத்திற்குள் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வு ஒரே நாளில் எந்த வித தாமதமும் இன்றி நடைபெற்றது. ஆனால், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் ஒரு சில பாடங்களுக்கு ஆசிரியர் பணிமூப்பு பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம், மாவட்டம் விட்டு மாவட்டம் நடந்த பணி நிரவல் கலந்தாய்வு ஆகியவை இன்டர்நெட் தொழில்நுட்ப கோளாறுகளால் அவ்வப்போது தாமதம் ஏற்பட்டு நீண்டு கொண்டு போனது. இதனால், ஒரு சில பாடங்களுக்கு ஒரு நாளில் முடிய வேண்டிய கலந்தாய்வு இரண்டு, மூன்று நாட்களானது. அவ்வாறு நடந்தும் ஆசிரியர்கள் இரவு, பகல் பாராது காத்திருந்து பணிமாறுதல் பெற்றுச் சென்றனர். அதே நேரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் கலந்தாய்வு நடைபெற்ற இடத்தில் காத்திருந்தும் வெளி மாவட்டத்தில் பணி மாறுதல் கிடைக்காமல் பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்ற நாட்களுக்கு தற்செயல் விடுப்பு போட்டுள்ளார்கள். மேலும், பொது மாறுதல் கலந்தாய்வுக்கு சென்ற ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெறும் மையங்களில் கையெழுத்திட்டு உள்ளதால், அந்நாட்களை மாற்றுப்பணியாக கருத வேண்டும். மேலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு பள்ளிக்கல்வி துறையின் நிர்வாகம் மேலும் சிறப்படைவதற்கான முக்கிய செயல்பாடாக இருந்து வருகிறது. எனவே, ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் நாட்களை பணிநாட்களாக கருதவேண்டும். தமிழக வரலாற்றிலேயே மிக நேர்மையாக 100 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு, பணி நிரவல் கலந்தாய்வு நடத்தி புதிய வரலாறு படைத்துள்ளது. இவ்வாறு ராமு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459