Cps ரத்து செய்ய வேண்டும், பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்தால் ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் :ஆசிரியர் சங்கம் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

30/12/2021

Cps ரத்து செய்ய வேண்டும், பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்தால் ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் :ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 30.12.2021 அன்று மாநிலத் துணைத் தலைவர் மா.ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசகன் வரவேற்புரை ஆற்றினார். வரவு-செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு சமர்ப்பித்தார்.


                  கூட்டத்தில் வேலை அறிக்கையைச் சமர்ப்பித்தும், சங்கத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கவுரையாற்றினார். கூட்டப் பொருள்களின் மீது மாநிலம் முழுவதுமிருந்து வருகை புரிந்த மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                  தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய கல்விக் கொள்கை - 2020 ஐ திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட மக்கள் நலன், தேச நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ஊழியர் அமைப்புக்கள் அறிவித்துள்ள 2022 பிப்ரவரி 23, 24 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளதால், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அப்போராட்டத்தில் பங்கேற்பதென மாநிலச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

                  கல்வி மேலாண்மைத் தகவல் தொகுப்பு முறையின் (EMIS) கீழ் தலைமை ஆசிரியர்கள் அளவுக்கு அதிகமாக தேவையற்ற முறையில் நாள்தோறும் பதிவுகள் மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதோடு, அளவுக்கு அதிகமான பதிவேடுகள் பராமரிக்க கல்வித்துறை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஆசிரியர்களின் அன்றாடக் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதோடு, ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். இதைக் கல்வித்துறை கைவிட வேண்டும்.

                  ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்துவதோடு, நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மாற்றியமைக்கப்பட்ட ஒன்றியங்களில் வேறு ஒன்றியங்களுக்குச் சென்ற ஆசிரியர்களின் முன்னுரிமை, பதவி உயர்வு பாதிக்காத வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும். மேலும், வேறு ஒன்றியங்களுக்குச் சென்றவர்கள் தங்களது பழைய ஒன்றியத்திற்கு வர வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அரசு நடுநிலைப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புக்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் தாங்கள் பணியாற்றிய பழைய பள்ளிக்குச் செல்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

                   பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதைக் கைவிட்டு கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண் கிறிஸ்துராஜ் நன்றி கூறினார்.
       

இப்படிக்கு,
ச. மயில்
பொதுச்செயலாளர்    

TNPTF தீர்மானம்: click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459