மாணவர்கள் நாளிதழ் வாசிக்க ஏற்பாடு: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

28/12/2021

மாணவர்கள் நாளிதழ் வாசிக்க ஏற்பாடு: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

அனைத்து பள்ளிகளிலும், நுாலக பாடவேளை உருவாக்கவும், நாளிதழ்கள் வாசிக்க தனி நேரம் ஒதுக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை வளர்க்க, அனைத்து பள்ளிகளிலும் நுாலகம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், சில இடங்களில், நுாலக பாடவேளை ஒதுக்கப்படாமல், பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இனி ஒவ்வொரு வகுப்புக்கும், வாரம் ஒரு முறை, நுாலக பாடவேளை ஒதுக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு மாணவனுக்கும், ஒரு புத்தகத்தை கட்டாயம் வாசிக்க தர வேண்டும்.முடிந்தவரை தனி அறை ஒதுக்கீடு செய்து, நுாலக செயல்பாட்டை அமல்படுத்த வேண்டும். பள்ளியில் தேவையான அளவு புத்தகங்கள் இல்லாவிட்டால், அருகில் உள்ள நுாலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். நுாலக நேரம் தவிர, காலை, மாலை மற்றும் உணவு இடைவேளை நேரங்களில், மாணவர்கள் நாளிதழ்களை வாசிக்கும் வகையில், நுாலகங்களை திறந்து வைக்க வேண்டும். மாணவர்களில் வாசகர் வட்டங்களை ஏற்படுத்தி நுாலகத்தை மேம்படுத்தலாம். மாணவர்கள் படித்த புத்தகங்களில் இருந்து கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், நுால் அறிமுகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்குள் மாவட்ட அளவிலான போட்டி நடத்தப்பட வேண்டும். இதில், வெற்றி பெறுபவர்களை நுாலக பயணம் அழைத்து செல்லலாம். மாநில அளவில் ஆண்டுக்கு மும்முறை போட்டிகள் நடத்தி, 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459