வட்டாரக்கல்வி அலுவலர் பணிக்கு உடனே சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பத்து மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், அப்பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை.
அதனால், வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு எழுதிய தேர்வர்கள் எதிர்காலம் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையின் நிர்வாகப் பணியான வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 97 பேரை
தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்த 42,868 பேருக்கு 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14, 15, 16 ஆகிய தேர்வுகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அவற்றின் முடிவுகள் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
அடுத்த சில வாரங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு எப்போதோ வேலை வழங்கப்பட்டு பல மாதங்களாக ஊதியமும் பெற்றிருப்பார்கள். ஆனால், முடிவுகள் வெளியிடப்பட்டு 10 மாதங்களாகியும் இன்னும் சான்றிதழ்கள் கூட சரிபார்க்கப்படவில்லை.
அரசு வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை அறிவிக்கை வெளியான நாளில் இருந்து அதிகபட்சமாக 4 மாதங்களில் அனைத்து நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அந்த குறிப்பிட்ட பணி தங்களுக்கு கிடைக்குமா... கிடைக்காதா? என்பதைத் தீர்மானித்து அடுத்தடுத்த பணிகளுக்கு விண்ணப்பிப்பது குறித்து முடிவு செய்ய இயலும்.
ஆனால், வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்காக அறிவிக்கை வெளியிடப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு 22 மாதங்கள் ஆகி விட்டன. முடிவுகள் வெளியிடப்பட்டு பத்து மாதங்களுக்கு மேலாகி விட்டன. ஆனால், இன்று வரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலை வெளியிட்டு, பணி நியமன ஆணைகளை வழங்காமல் தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது வரை அனைத்தும் விரைவாகவே நடைபெற்றது. போட்டித் தேர்வுகள் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட பிறகு கோரோனா நோய்ப் பரவல் தொடங்கி விட்டதால், அடுத்தடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தாமதம் ஆயின என்பது உண்மை தான். ஆனாலும்,
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நினைத்திருந்தால் கடந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்திருக்க முடியும்.
2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்தில் பரவத் தொடங்கிய கொரோனா மே மாதத்தில் உச்சத்தை அடைந்து ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் கட்டுக்குள் வந்து விட்டது. அப்போதே அதிகாரப்பூர்வமற்ற வகையில் தேர்தல் பரப்புரைகள் கூட தொடங்கி விட்டன.
ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே முடிவுகளை வெளியிட்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை முடித்து, பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கலாம். ஆனால், ஓராண்டு தாமதமாக கடந்த ஜனவரியில் முடிவுகளை வெளியிட்ட வாரியம் அடுத்த அடியை இன்னும் எடுத்து வைக்கவில்லை. இந்த தாமதத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான கல்வித் தகுதி பெற்றவர்களும் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
அவ்வாறு பலரும் விண்ணப்பித்திருக்கிறார்கள். வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, அண்மையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வு நடத்தப்பட்டது; விரைவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாததால், அந்தத் தேர்வை எழுதியவர்கள் மற்ற பணிக்கான தேர்வுகளை எழுதுவது குறித்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலை கோடி ரூபாய் கொடுத்தாலும் போக்க முடியாது.
எனவே, இனியும் தாமதிக்காமல் வட்டாரக்கல்வி அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். புத்தாண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட 97 பேருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கி, அவர்களின் வாழ்வில் புது வசந்தம் மலருவதை உறுதி செய்ய வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
16/12/2021
New
BEO - வட்டாரக்கல்வி அலுவலர் பணிக்கு உடனே சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த வலியுறுத்தல்!
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
News
Labels:
News
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment