10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகள் : தமிழக அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

28/09/2021

10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகள் : தமிழக அரசு அறிவிப்பு

 

-சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் வழங்கப்படும் செம்மொழி தமிழ் விருதுகள் 2010 முதல் 2019 வரையில் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்துத் தமிழ் வளர்ச்சித் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெரு முயற்சியால் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ் மொழியானது 2004-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கென தனித்தன்மையுடன் ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற கருணாநிதியின் கனவினை நிறைவேற்ற, மத்திய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், 2006-ல் இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக சென்னையில் அமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் முதல்வர் ஆவார்.செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசால் தோராயமாக 17 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்நிலத்தினைச் சமன் செய்ய ரூ.1.45 கோடி நிதி வழங்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி கருணாநிதி, தமது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதியினை வழங்கி கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளையை அந்நிறுவனத்தில் நிறுவினார். அவ்வறக்கட்டளையின் வாயிலாக செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பினை வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கு ஆண்டுதோறும் கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது இந்தியாவிலேயே உயரிய விருதாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு.கருணாநிதியின் உருவச்சிலையும் அடங்கியதாகும். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞருக்கு இவ்விருது வழங்கப்படும்.அறக்கட்டளை தொடங்கப்பட்டபின் 2009ஆம் ஆண்டிற்கான முதல் விருது, பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர். மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது முதல்வரின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நிறுவனத்தின் 8-வது ஆட்சிக்குழுக் கூட்டம் முதல்வரின் தலைமையில் 30.08.2021 அன்று நடைபெற்றது. தமிழக முதல்வரால் அமைக்கப் பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் கீழ்க்காணும் பத்து விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:1. 2010 - முனைவர் வீ.எஸ். இராஜம், (,,) . 2. 2011 - பேராசிரியர் பொன். கோதண்டராமன் (முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை) 3. 2012 - பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி ( முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்) 4. 2013 - பேராசிரியர் ப. மருதநாயகம் (முன்னாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், முன்னாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்) 5. 2014 - பேராசிரியர் கு. மோகனராசு (முன்னாள் பேராசிரியர்&; தலைவர், திருக்குறள் ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை) 6. 2015- பேராசிரியர். மறைமலை இலக்குவனார் ( முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி) 7. 2016 - பேராசிரியர் கா. ராஜன் ( முன்னாள் பேராசிரியர், வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்), 8. 2017 - பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், (,, ). 9. 2018 - கவிஞர் ஈரோடு தமிழன்பன் ( முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை). 10. 2019 - பேராசிரியர் கு.சிவமணி ( முன்னாள் முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் &; திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை). 2010 முதல் 2019 வரையிலான கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான விருதாளர்கள் பட்டியல் 30.08.2021 அன்று நடைபெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 8-வது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் 2020, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்குரிய கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கு விளம்பரம் வெளியிடவும் ஆட்சிக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்குரிய கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்நாட்டுப் பெருமக்களின் முன்னிலையில் மாநில அளவிலான தமிழ்மொழி சார்ந்த விழாவில் கூடிய விரைவில் வழங்கப்படவுள்ளது. மேலும் 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கான பணிகள் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன" இவ்வாறு தமிழ் வளர்ச்சித் துறை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459