பாவிகளா ஆணாசிரியர்கள்? - ஆசிரியர் மலர்

Latest

31/07/2021

பாவிகளா ஆணாசிரியர்கள்?

 


IMG_20210728_183416

அண்மையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஓர் அவசர ஆணையொன்று பிறப்பித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சமூகத்தில் மலிந்து காணப்படும் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஆகியவற்றை 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடிய உள்ள மாணவிகளுக்கு ஏற்படுத்த ஆசிரியைகளைப் பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். தலா 10 மாணவிகளுக்கு ஒருவர் எனப் பெண் ஆசிரியைகள் செயல்பட வேண்டும். ஆண் ஆசிரியர்களைப் பொறுப்பாளராக நியமிக்க கூடாது என்பன இதன் முக்கிய அம்சங்களாவன.


ஏற்கனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிர் பள்ளிகளிலும் பெண் ஆசிரியைகள் மட்டுமே இனி பணிபுரிந்திட வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாலின சமத்துவம் என்பது ஒற்றைப் பாலினங்களாக இயங்குவது ஆகாது. எதிர் பாலினத்தோரிடம் சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை நன்முறையில் பேணி நடப்பதாகும். நல்ல புரிதல், விட்டுக் கொடுத்தல், நல்லிணக்கம், இனக் கவர்ச்சியிலிருந்து மீளுதல் போன்ற நற்பண்புகள் வளரும் அல்லது வளர்க்கும் களமாகத் தொன்றுதொட்டு பள்ளிகள் இருந்து வருகின்றன. 

அதுபோல், ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும் இரண்டாம் பெற்றோராகத் திகழ்ந்து வருவது அறிந்ததே. எத்தனையோ இடங்களில் இருபால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பால் வேறுபாடு கடந்து ஆசிரியப் பெருமக்கள் முதன்மைப் பெற்றோராக இருந்து நல்வழிப்படுத்தி வருவதும் காணக் கிடைக்கின்றன.

குறிப்பாக, சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சாதியத்தின் விளைவாக மறைவாக நடக்கும் பெண் குழந்தைத் திருமணங்களை உலகிற்கு வெளிப்படுத்தி ஊர் பொல்லாப்பை வீணாக சம்பாதித்துக் கொண்டவர்கள் ஆணாசிரியர்களே ஆவர். மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிராக சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு வகையான கொடுமைகள், இழிவான போக்குகள், ஒடுக்குமுறைகள் முதலானவற்றைத் தம் கற்பித்தல் நிகழ்வுகளில் வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களில் தொடர்ந்து விழிப்புணர்வைத் தோற்றுவிக்க எந்த ஆண் ஆசிரியர்களும் இதுவரை தயங்கியதில்லை. 

தவிர, பாலியல் குற்றங்கள் சார்ந்த தவறான தொடுதல்கள், பேச்சுகள், செயல்பாடுகள், விளைவுகள் குறித்து விழிப்புணர்வைப் பதின்ம வயது பெண் பிள்ளைகளிடம் பக்குவமாக எடுத்துரைக்கும் ஆண் ஆசிரியர்கள் பலருண்டு. ஏனெனில், பள்ளிகள் மட்டுமே இன்றளவும் சமூகத்தில் பேசாப் பொருட்கள் குறித்து துணிந்து பேசும் இடங்களாகக் காட்சி அளிக்கின்றன. தாம் பெறாத தம் மகள்கள் பாதுகாப்பு முறைமைகள் இன்றியமையாதவை என ஆண் ஆசிரியர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.

இத்தகைய சூழலில், ஓற்றைப் பாலினத்தை ஓங்கி உயர்த்திப் பிடிக்கும் விதமாக, கல்வியில், கல்வி வழங்குதலில் பெண் பிரிவினையானது பல்வேறு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இருபாலர் மற்றும் மகளிர் பள்ளிகளிலும் ஆண் ஆசிரியர்கள் புறக்கணிப்பு என்பதும் ஆபத்து மிக்கவர்கள் என்ற எண்ணத்தைக் கட்டமைப்பது என்பதும் சரியல்ல.

இலட்சத்தில் ஓரிருவர் செய்யும் தவறுகளுக்கு அனைத்து ஆசிரியர்களையும் பாலியல் சார்ந்த குற்றமிழைப்பவர்களாகக் காணும் நவீன மனப்போக்குக்கு அரசே தீனி போடக் கூடாது. நாளடைவில் இது ஒரு வகையான ஆண்கள் மீதான அச்ச மனநோயாக (Androphobia) பெண் குழந்தைகளிடம் வளர நேரிடும். பிற்காலத்தில் இது மேலும் வலுப்பெற்று உயர் கல்வி, வேலைவாய்ப்பு, இல்லற வாழ்க்கை ஆகியவற்றில் மேலோங்கிக் காணப்படும் குழுப் பண்பாடு மற்றும் இணக்கம் ஆகியவற்றில் பாதிப்பை நிகழ்த்தும்.

நம் தந்தையைக் காட்டிலும் பன்முகத் தன்மையுடன் நல்ல முன்மாதிரியாக விளங்கும் பல்வேறு ஆண் ஆசிரியர்களின் நல்ல பயனுள்ள வழிகாட்டுதல் கிடைக்கப்பெறாமல் பெண் குழந்தைகள் அலைக்கழிவர். கல்வி கசக்கும். காலப்போக்கில் பள்ளி இடைவிலகல் அதிகரிக்கும். ஆண்கள் எல்லோரும் ஆபத்தை விளைவிப்பவர்கள் என்னும் தப்பெண்ணம் வலுவடையும். 

அப்பழுக்கற்ற தம் அறப்பணியில் அரசு செயற்கையாக விளைவித்த பாலினம் சார்ந்த புறக்கணிப்பு காரணமாக ஆண் ஆசிரியர்கள் பலரும் புழுங்கிச் சாவர். தாம் ஈவு இரக்கமற்ற இழிபிறவியோ என்று சுய கழிவிரக்கம் கொண்டு கடமைக்குக் கற்பிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவும் வாய்ப்புண்டு. சமுதாயம் விதிக்கும் குற்ற உணர்வால் தம் பிஞ்சு மகளை வாஞ்சையுடன் தீண்டக்கூட அஞ்சுவர். 

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு உருவான கதைபோல பள்ளிக்கல்வித்துறையின் நல்லெண்ண நடவடிக்கைகள் ஆகிவிடக் கூடாது. உண்மையிலேயே பெண் குழந்தைகள் மீது பாலியல் சார்ந்த குற்றமிழைப்போருக்கு எத்தகைய கொடும் தண்டனைகள் கொடுத்தாலும் தப்பில்லை. அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டிய மனிதத்தன்மை அற்ற கொடிய குற்றவாளிகள் ஆவார்கள். அத்தகைய ஈனப்பிறவிகளுக்காக ஈவும் இரக்கமும் மிக்க தாயுமானவர்களாகத் திகழும் ஏனைய ஆண் ஆசிரியர்களையும் தண்டிக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459