இந்தியாவில் சட்டப்பூர்வ பாதுகாப்பை இழந்த முதல் அமெரிக்க நிறுவனமாக மாறிய ட்விட்டர் - உயரதிகாரிகளுக்கு சிக்கல் - ஆசிரியர் மலர்

Latest

18/06/2021

இந்தியாவில் சட்டப்பூர்வ பாதுகாப்பை இழந்த முதல் அமெரிக்க நிறுவனமாக மாறிய ட்விட்டர் - உயரதிகாரிகளுக்கு சிக்கல்

 


சோஷியல் மீடியாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், அதை பின்பற்ற தவறிய ட்விட்டருக்கு வழங்கப்பட்டு வந்த சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. புதிய ஐடி விதிகளை பின்பற்ற ட்விட்டர் நிறுவனத்திற்கு பல முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் ஆனால் ட்விட்டர் நிறுவனம் விதிகளுக்கு இணங்க கூடாது என்ற பாதையை தேர்ந்தெடுத்தது என்றும் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.ட்விட்டர் நிறுவனத்திற்கான சட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதால் எதாவது ஒரு யூஸர் ட்விட்டரில் சட்டவிரோத மற்றும் ஆட்சேபத்திற்குரிய போஸ்ட் பதிவிட்டால் கூட ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனர் உட்பட நிறுவனத்தின் அனைத்து உயர் நிர்வாகிகள், இப்போது போலீசாரின் விசாரணை மற்றும் குற்றவியல் பொறுப்பை எதிர் கொள்ள கூடும். இதனால் ட்விட்டர் மூலம் தனி நபர் ஒருவர் போஸ்ட் செய்து கூறும் கருத்து ட்விட்டரின் நேரடி கருத்தாகவே இனி பார்க்கப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருந்து வரும் நேரத்தில், ஐடி சட்டத்தின் பிரிவு 79இன் கீழ் வழங்கப்படும் சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டதன் மூலம் பாதுகாப்பு கவசத்தை இழந்த ஒரே அமெரிக்க சோஷியல் மீடியாவாக இப்போது ட்விட்டர் இருக்கிறது. முன்னதாக தேச பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான போஸ்ட்கள் சோஷியல் மீடியாக்களில் கண்டறியப்பட்டால் அந்த போஸ்ட்டை முதல் முதலில் ஷேர் செய்த ஆள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.இதற்காக இந்திய அளவில் குறை தீர்ப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் குறித்த தகவலை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டவை புதிய ஐடி விதிகளில் இடம்பெற்றுள்ளன. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சோஷியல் மீடியாக்களும் இந்த புதியவிதிகளை ஏற்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. மற்ற சோசியல் மீடியாக்கள் துவக்கத்தில் மறுத்தாலும் பின்னர் விதிகளை ஏற்று கொண்டு விட்டன. ஆனால் ட்விட்டர் மட்டும் கட்சி வரை இந்தியாவின் புதிய ஐடி விதிகளை ஏற்று கொள்ளவே இல்லை. விதிகளை ஏற்று கொண்ட நிறுவனங்கள் முதலில் மே 25-க்குள் அதிகாரிகளை நியமிக்க வேண்டியிருந்தது.ஆனால் விதிமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக லாக்டவுன் மற்றும் பிற தொழில்நுட்ப சவால்களை காரணம் காட்டின நிறுவனங்கள். இதனிடையே ட்விட்டரின் பிடிவாதம் பற்றி கடுமையாக சாடியுள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், \"பேச்சு சுதந்திரத்திற்கான கொடியை தாங்கியுள்ளதாக தன்னை சித்தரிக்கும் ட்விட்டர், இடைநிலை வழிகாட்டுதல்கள் என்று வரும் போது வேண்டுமென்றே அதை மீறுவதற்கான பாதையைத் தேர்ந்தெடுப்பது வியப்பை ஏற்படுத்துகிறது\" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விஷயத்தின் எளிய உண்மை என்னவென்றால், மே 26 முதல் நடைமுறைக்கு வந்த இடைநிலை வழிகாட்டுதல்களை ட்விட்டர் பின்பற்றத் தவறிவிட்டது.மேலும், விதிகளுக்கு இணங்க பல வாய்ப்புகள் வழங்கப்பட்டன, இருப்பினும் அது இணக்கமற்ற பாதையை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் இந்திய சட்டங்களை பின்பற்ற தயங்குவது ஏன் என்றும் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.இதனிடையே ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசுகையில், இந்திய அரசின் புதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க நிறுவனம் தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்குமான மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459