Covid Questions : நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா? மருத்துவர் கூறும் பதில் - ஆசிரியர் மலர்

Latest

16/05/2021

Covid Questions : நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா? மருத்துவர் கூறும் பதில்

 


நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?


– நாகலட்சுமி


பதில் சொல்கிறார் அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி.


“நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா என்ற பயம் தேவையற்றது. ஆனால், அதே நேரம் `நான் மணிக்கணக்கில் நீராவி பிடித்தே கொரோனாவை விரட்டி விடுவேன்’ என நினைப்பது தவறு. அளவுக்கு மிஞ்சினால் எல்லாமே ஆபத்துதான். இதையே சித்த மருத்துவமும் வலியுறுத்துகிறது.


அதன்படி 2 முதல் 3 நிமிடங்கள் ஆவி பிடித்தால் போதுமானது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், ஆவி பிடிக்கும்போது நன்கு வியர்ப்பதே அது போதுமானது என்பதற்கான அர்த்தம். ஆவி பிடிக்கும்போது உடலிலுள்ள தேவையற்ற நீர் வெளியேறுவது மிக நல்ல விஷயம்.


தலைவலி

Also Read:


இதன் மூலம் தலைபாரம், நீரேற்றம், கப சுரம், விஷ சுரம், குளிர் சுரம் போன்ற உபாதைகள் நீங்கி, தொண்டையில் உள்ள கிருமிகள் நீங்கும், காதுவலி, உடல்வலி நீங்கும் என்கிறது சித்த மருத்துவம்.


ஆவி பிடிப்பதன் மூலம் கப ஆதிக்கம் குறையும். அப்போது ஒருவித வறட்சி ஏற்படும். அதிக நேரம் ஆவிபிடிக்கும்போது அந்த வறட்சியானது தொண்டை, மூக்குப் பகுதிகளைப் பாதிக்கும். அந்த இடங்களில் எரிச்சல், கொப்புளங்கள் தோன்றுவதெல்லாம் நடக்கும். அதனால்தான் நீண்ட நேரம் ஆவி பிடிக்கக் கூடாதென வலியுறுத்தப்படுகிறது.


நீராவி பிடிக்கும்போது யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

உடலில் எண்ணெய்ப்பசை அற்றவர்கள், வறட்சியான சருமம் உள்ளவர்கள், தழும்புகள் உள்ளவர்கள், கீலாய்டு எனும் சருமப் பிரச்னை உள்ளவர்கள், கண்களில் அறுவைசிகிச்சை செய்தவர்கள், கண் நரம்புகள் பலவீனமாக உள்ளவர்கள், தீவிர இதய நோய் உள்ளவர்கள், காசநோயாளிகள், தீவிர நீரிழிவு உள்ளவர்கள், மஞ்சள் காமாலை உள்ளவர்கள், ரத்தச்சோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், மாதவிடாயில் இருப்பவர்கள், ஆசனவாய் வெளியே வரும் ரெக்டல் புரோலாப்ஸ் பாதிப்பு உள்ளவர்கள் எல்லோரும் அடிக்கடி ஆவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.



அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

வாரம் இரண்டு அல்லது மூன்று முறை பிடித்தால் போதும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்களுக்கு மேல் பிடிக்க வேண்டாம்.


இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும்.


கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions’ பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459