தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ கரோனா தடுப்பு மருந்து: டிஆர்டிஓ கண்டுபிடித்த மருந்து அடுத்த வாரம் அறிமுகம் - ஆசிரியர் மலர்

Latest

15/05/2021

தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ கரோனா தடுப்பு மருந்து: டிஆர்டிஓ கண்டுபிடித்த மருந்து அடுத்த வாரம் அறிமுகம்

 


தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கரோனா தடுப்பு மருந்தை அடுத்த வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 

 

சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் 2டிஜி கரோனா தடுப்பு மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம். இதன் மூலம் ஆக்சிஜன் உதவியோடு இருக்கும் கரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும். கரோனாவிலிருந்து விடுபட முடியும். 

 

முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ் பவுடர் மருந்துகளை வெளியிடுவதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. 

 

டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) ஆகியவற்றின் கலவையில், டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. 

 

சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி (சிசிஎம்பி) உதவியுடன் டிஆர்டிஓ மற்றும் ஐஎன்எம்ஏஎஸ் அமைப்பினர் ஆய்வில் இறங்கினர். இந்த ஆய்வில் மருந்தின் மூலக்கூறுகள் கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டன. 

 

இந்த முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு, 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 

 

இதைத் தொடர்ந்து டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், டிஆர்டிஓ ஆகியவை இணைந்து கிளினிக்கல் பரிசோதனையை கரோனா நோயாளிகள் மீது நடத்தினர். 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை இந்தியாவில் 6 மருத்துவமனைகளில் நடந்து வெற்றியாக அமைந்ததையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-வது கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை 2020 டிசம்பர் முதல் 2021 மார்ச் வரை 27 கோவிட் மருத்துவமனைகளில் உள்ள 220 கரோனா நோயாளிகள் மீது பரிசோதிக்கப்பட்டது. 

 

இந்த 3-வது கிளினிக்கல் பரிசோதனையில் பெறப்பட்ட முடிவுகள் அனைத்தும் டிசிஜிஐ அமைப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் டிஆர்டிஓ கண்டுபிடித்த 2-டிஜி மருந்து கரோனா நோயாளிகளுக்கு சிறப்பாகச் செயல்படுகிறது, ஆக்சிஜனை நம்பி இருக்கும் நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது, ஆக்சிஜனைச் சார்ந்து இருக்கும் நோயாளிகள் விரைவில் இல்லாமல் மீள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. 

 

இதையடுத்து, கடந்த 1-ம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்து பவுடர் வடிவில் இருப்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது. 

 

இந்த மருந்து குறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “டிஆர்டிஓ அமைப்பு தயாரித்த பவுடர் வடிவ கரோனா தடுப்பு மருந்து 2டிஜி மருந்து அடுத்த வாரம் முறைப்படி அறிமுகமாகிறது. தண்ணீர் கலந்து குடிக்கும் இந்த பவுடர் வடிவ மருந்து முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ்கள் வெளியிடப்பட்டு கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும். 

 

இதற்கான உற்பத்தியில் மருந்து நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்த மருந்தை டிஆர்டிஓ விஞ்ஞானி டாக்டர் அனந்த் நாராயண் பாட் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்தனர்” எனத் தெரிவித்தார்.-Tamil The Hindu

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459