CPS - ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை தவறாக கையாள்வதால் அரசுக்கு 1,500 கோடி இழப்பு: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம் - ஆசிரியர் மலர்

Latest

03/03/2021

CPS - ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை தவறாக கையாள்வதால் அரசுக்கு 1,500 கோடி இழப்பு: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம்

 images%2528227%2529



 பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் கூறியதாவது:

தமிழகத்தில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். அடிப்படை ஊதியம், அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு இணையான தொகை அரசின் பங்களிப்பாக பொதுக்கணக்கில் வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொகை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று ஆணையத்திடம் முறையாக செலுத்தப்படாமல், அரசால் தவறாக கையாளப்பட்டு வருகிறது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது.


புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்பு தொகை, அதற்கான வட்டி தொகை ஆகியவை மூலம் தற்போது சுமார் ரூ.36 ஆயிரம் கோடி தமிழக அரசின் பொதுக்கணக்கில் இருக்கிறது. இந்த தொகையை ரிசர்வ் வங்கியிலுள்ள மத்திய அரசு கருவூலப் பெட்டகத்தில் வைத்துள்ளனர். இதற்காக ஆண்டு வட்டியாக 2.9 சதவீதம் தொகை மட்டுமே மத்திய அரசு, தமிழக அரசிற்கு வழங்குகிறது. ஆனால், ஊழியர்களுக்கு தமிழக அரசு வழங்கக்கூடிய தொகை 7.1 சதவீதம். இதனால் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லஞ்சம் அதிகமாகி வருவதற்கு இந்த புதிய ஓய்வூதிய திட்டம் ஒரு காரணமாக உள்ளது.


லஞ்ச ஒழிப்புத்துறையில் அரசு ஊழியர் சிக்கினால் ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை கிடைக்காது என்ற ஒருவித பயம் அரசு ஊழியர்களிடம் இருந்தது. தற்போது புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் ஏதும் இல்லாததால் துணிந்து லஞ்சம் வாங்குகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு ஊழியர் ஓய்வு பெற்றவுடன் குறிப்பிட்ட அளவில் பலன்கள், அதன் தொடர்ச்சியாக மாத ஓய்வூதியம், இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கும் கிடைத்து வந்தது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள 6 லட்சம் பேரில், அண்மையில் பணி ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்கள் என 14 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் இல்லாததால் அவதியடைகின்றனர்.


கடந்த 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என அறிவித்தனர். ஆனால், 5 ஆண்டாக இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. கடைசி நேரத்திலாவது சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். ஏமாற்றமே மிஞ்சியது. அரசு ஊழியர்களின் வாக்கு அதிமுகவிற்கு தேவை இல்லை என்ற முடிவுக்கு எடப்பாடி அரசு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த டிச. 16 அன்று எங்களது இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இதுகுறித்து கோரிக்கை விடுத்தோம். இதை தேர்தல் அறிக்கையில் கொள்கை முடிவாக அறிவிப்போம் என்று அவர்  உறுதியளித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459