தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும். - மு.க.ஸ்டாலின் - ஆசிரியர் மலர்

Latest

21/11/2020

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும். - மு.க.ஸ்டாலின்

 


தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள  அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில்,  

 

\"தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையும், வெளிப்படுத்தும் வகையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று, சட்டமன்றத்தில் நிறைவேற்றின. ஆனால், ஆளும் அக்கறையின்மையால் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படவில்லை.    

 

நீட் தேர்வால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதறடிக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு என ஆளும் அரசு அறிவித்தது. நீண்ட உறக்கம் கொண்டிருந்த உள் இட ஒதுக்கீடு திமுக நடத்திய போராட்டத்தினால் செயல்வடிவம் பெற்றது. நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின் படி, அரசு மருத்துவக்கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

 

இந்நிலையில், அவர்களின் துயர் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என்பதை நினைவூட்டும் அதே நேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள திமுக., இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

 

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கின்ற தி.மு.கழக ஆட்சியில்,  நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு, அரசுப்பள்ளி - அரசு உதவிபெறும் பள்ளி - கிராமப்புற - ஏழை - பின்தங்கிய - ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களின் மருத்துவ கனவும்  நிச்சயமாக நிறைவேறும் என்ற உறுதியினை இப்போதே வழங்குகிறேன்.:\" என்று குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459