மருத்துவப்படிப்பில் இந்தாண்டு இடஒதுக்கீடு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம் - ஆசிரியர் மலர்

Latest

15/10/2020

மருத்துவப்படிப்பில் இந்தாண்டு இடஒதுக்கீடு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்


 புதுடில்லி: மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓபிசி) 50 சதவீத இடஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் வழங்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் இருந்து 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், மற்ற மாநிலங்களும் வழங்குகின்றன. இந்நிலையில், இந்த இடங்களில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.


இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்படியும், இது பற்றிய சட்ட வரையறைகளை 3 மாதங்களில் உருவாக்கும்படியும், அதற்காக சிறப்பு குழுவை அமைக்கும்படியும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே (2020) அமல்படுத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 13ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியுமா? அல்லது இது குறித்த ஆலோசனை இன்னும் முடியாததால் 27 சதவீதமாவது கொடுக்க முடியுமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தி, அக்.,16க்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுகக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், மத்திய அரசு சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‛மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓபிசி) 50 சதவீத இடஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் வழங்க முடியாது,’ என தெரிவித்துள்ளது. ஓபிசி இடஒதுக்கீடு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நடப்பாண்டில் இடஒதுக்கீடு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459