எழுத்தாளர் சோ.தர்மனின் ஃபேஸ்புக் பதிவை தன்னுடைய தீர்ப்பில் அரசுக்கு சுட்டிக்காட்டிய நீதிபதி! - ஆசிரியர் மலர்

Latest

23/09/2020

எழுத்தாளர் சோ.தர்மனின் ஃபேஸ்புக் பதிவை தன்னுடைய தீர்ப்பில் அரசுக்கு சுட்டிக்காட்டிய நீதிபதி!

தேனி மாவட்டம் போடி தாலுகா, அம்மாப்பட்டி கிராமத்தில் உள்ள மீனாட்சியம்மன் கண்மாயை, மீன்வளத்துறை, மீன் பாசி வளர்ப்புக்கென குத்தகைக்குக் விடுத்திருந்தது. வழக்கமாக சுமார் ரூ.40 லட்சத்துக்கு ஏலம் போகும் அந்தக் கண்மாயை, 3 ஆண்டுகளுக்கு வெறுமனே ரூ.19.44 லட்சத்துக்கு மட்டுமே கொடுத்திருப்பதாகவும், முறைகேடான இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த எஸ்.டி.மணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். குத்தகைதாரர்கள் நடந்துகொள்ளும் முறை குறித்தும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மீன்வளத்துறையின் குத்தகை அனுமதியை ரத்து செய்து தீர்ப்பு அளித்தார். அத்தீர்ப்பில், எழுத்தாளர் சோ.தர்மனின் சமீபத்திய முகநூல் பதிவு ஒன்றையும் முழுமையாக மேற்கோள் காட்டியுள்ளார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற`சூல்’ நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் சோ.தர்மன், தன் முகநூலில் `ஒரு கண்மாய்க்காரையில் குத்தகைக்காரர் அனுமதியுடன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, மாடுமேய்க்கும் ஒருவர் என்னிடம் வந்து, `ஐயா ஆடு, மாடுகளுக்குத் தண்ணீர் காட்டணும். அதுக்கு நீங்க அனுமதிக்கணும்.
எல்லாக் கண்மாய்களையும் அரசு குத்தகைக்கு விட்டுருச்சு. குத்தகைக்காரர்கள் மாடுகளைத் தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. எங்களை அடித்து விரட்டுகிறார்கள். மாடுகளைக் கற்களால் எறிந்து விரட்டுகிறார்கள்’ என மாடுமேய்ப்பவர் கூறியதைக் கேட்டு, மன்னர்கள், ஜமீன்தார்கள், வெள்ளையர்கள் காலத்தில் நீர் நிலைகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி முகநூலில் பதிவிட்டிருந்தார்.

11 பக்கங்கள் கொண்ட அத்தீர்ப்பில் அவரது முகநூல் பதிவு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. சோ.தர்மனின் `சூல்’ நாவலுக்காகக் கடந்த 2019-ம் ஆண்டுக்கான `சாகித்ய அகாடமி’ விருது வழங்கப்பட்டது. அதில் மன்னர்கள், ஜமீன்தார்கள், வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் நீர் ஆதாரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து எப்படிப் பராமரித்தார்கள், சுதந்திரத்துக்குப் பிறகு அவற்றின் பராமரிப்பு ஆகியவை குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சோ.தர்மனிடம் பேசினோம், “நீரின்றி அமையாது உலகு வானின்றி அமையாது ஒழுக்கு” என்ற குறள் மூலம் `மழை இல்லாவிட்டால் ஒழுக்கம் கெட்டுப் போய்விடும் எனச் கூறியுள்ளார் வள்ளுவர். நீரின் முக்கியத்தும் அறிந்ததால்தான், `கடவுள் வாழ்த்து’க்கு அடுத்ததாக நீருக்கு முக்கியத்தும் கொடுத்து, `வான் சிறப்பு’ அதிகாரத்தைப் பாடியுள்ளார். மன்னர்கள் காலத்தில் கண்மாய்களைச் செய்த `மராமத்து’வை, ஜமீன்தார்கள், `குடிமராமத்து’ என அறிமுகப்படுத்தினார்கள்.




பிரிட்டிஷ்காரர்களின் காலத்தில் நீர்ப்பாய்ச்சி, மதகடக்கி, மடைக்குடும்பன், மடையன் (மடையை ஆள்பவன்), நீர்கட்டி இதுபோன்ற பல பெயர்களில் கண்மாயைப் பராமரிக்க வேலையாட்களை நியமித்துள்ளனர். இவர்கள் கையில் செப்பு வளையக் காப்புபோட்டு அதிகாரத்துடன் இருப்பார்கள். இவர்களது அனுமதியில்லாமல் ஒருசொட்டு தண்ணீரைக்கூட வெளியே எடுத்துச் செல்ல முடியாது. அனைத்து விவசாயிகளின் நிலங்களுக்கும் தண்ணீரைச் சமமாகப் பாய்ச்சினார்கள். இவர்களுக்குக் கூலியாக விவசாயிகள் தங்களின் நிலத்தில் விளைவதில் குறிப்பிட்ட அளவு கொடுப்பார்கள்.
“கண்மாயைப் பார்க்கும்போது விளக்கி வச்ச வெண்கலக் கும்பா மாதிரி பளபளன்னு இருக்கணும்டா. இல்லன்னா ஊரு வெளங்காமப் போயிடும்டா” என கிராமங்களில் சொல்வார்கள். ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் தூர்வாரப்பட்டது. தண்டோரா போட்டு `நாளைக்கு ஊரு கண்மாயை தூர்வாரணும். யாரும் வேலை வெட்டிக்குப் போகக்கூடாது’ன்னு தண்டோரா போடுவார்கள். ஊர் மக்கள் திரண்டு கடப்பாறை, மண்வெட்டிகளுடன் தூர் வாரும் பணிக்கு வந்துவிடுவார்கள். எந்த மரத்தை வெட்ட வேண்டும், எந்த மரத்தை வெட்டக் கூடாது, எந்த இடத்தில் மண் அள்ள வேண்டும், எந்த இடத்தில் அள்ளக் கூடாது, கரையில் இருந்து எத்தனை அடி தூரத்தில் வெட்ட வேண்டும் என எல்லாமே அவர்களுக்குத் தெரியும்.

ஒவ்வொரு வருசமும் மழைக்கு முன்பாகத் தவறாமல் மராமத்தை செய்துவிடுவார்கள். அதில் தேங்கித் ததும்பும் தண்ணீரை பார்க்கும்போது கண்மாய் கடல் போலக் காட்சியளிக்கும். தென் மாவட்டங்களில் நீர்நிலைகள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பில் எட்டயபுரம் எட்டப்ப மகாராசாவின் பங்கு சிறப்பானது. எட்டப்ப மகாராசா மீது இன்றும் கிராமங்களில் மக்கள் அதிக மரியாதை வைத்துள்ளனர். `எட்டு’ என்ற வார்த்தையை உச்சரிக்க மாட்டார்கள்.
விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை அளக்கும்போது ஏழுக்குப் பிறகு `எட்டு’ என்பதற்குப் பதிலாக `மகாராசா… மகாராசா…’ எனச் சொல்லிட்டு அடுத்ததாக ஒன்பதாவது எண்ணை உச்சரிப்பார்கள். 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது தமிழகத்தில் இருந்த கண்மாய்களின் எண்ணிக்கை 39,640. கிணறுகளின் எண்ணிக்கை 6 லட்சம். இதுதவிர ஊரணிகள், தெப்பம், நீராவி ஆகியவையும் இருந்தன. ஊர் மக்கள் பொறுப்பில் இருந்த கண்மாய்களை அரசு பொதுப்பணித்துறைக்கு மாற்றிய பிறகு, கண்மாய்க்கும் ஊர் மக்களும் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை, வனத்துறை, காவல்துறை என 5 துறைகளின் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் உள்ளது. ஊராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் வரம்பிலுள்ள கண்மாய்கள் மீன் வளர்ப்புக்காக தனிநபருக்கு குத்தகைக்கு விடப்படுகின்றன. இவர்கள், கட்லா போன்ற வெளிநாட்டு மீன் குஞ்சுகளை வளர்க்கிறார்கள். இவை அபரிமிதமாக வளர்ச்சி அடையும் மீன் இனங்கள். இந்த மீன்களால் பாம்புக்கெண்டை, பல்கெண்டை, கெளுறு, கெழுத்தி, விலாங்கு, விரால், குரவை, ஆரா, உழுவை, அயிரை போன்ற நாட்டு மீன் இனங்கள் அழிந்துவிட்டன.
மீன்களைப் பிடிப்பதற்காக மோட்டார் மூலம் தண்ணீரை வீணாக வெளியேற்றிவிட்டு மீன்களைப் பிடிக்கிறார். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் குடிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. கண்மாய் கரைகளில் உள்ள மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வரும் வெளிநாட்டுப் பறவைகளை வெடிவெடித்து விரட்டுகிறார்கள். இந்தக் கொடூரங்களையெல்லாம் சகித்துக் கொண்டுதான் தற்போது எஞ்சியிருக்கும் கண்மாய்கள் இருக்கின்றன

இதுகுறித்து என் முகநூலில் பதிவிட்டிருந்தேன். `சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பதிவைப் பாருங்கள்’ என்ற வாசகமும் அந்தத் தீர்ப்பில் இடம்பெற்றிருக்கிறது. கூடவே, `கண்மாய் போன்ற நீர்நிலைகளை ஏலம் விடும் நடைமுறைகளை மாற்றுங்கள். நுகர்வோருக்கு உள்ள உரிமைகளை உறுதிப்படுத்துங்கள். அத்துடன், தாகத்துக்காகக் கண்மாய்களில் நீர் அருந்த வரும் ஆடு, மாடுகள், பறவைகளை எவ்விததிலும் துன்புறுத்தக் கூடாது’ என்றும் தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு என்பது இந்திய அரசின் ஆவணங்களில் ஒன்று. அது காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படுவதுடன், பல்வேறு சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்களால் வாசிக்கப்படும். மேற்கோள் காட்டப்படும். அந்தத் தீர்ப்பில் என்னுடைய பெயரும் கருத்தும் இடம்பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.




ஒரு எழுத்தாளரின் முகநூல் பதிவுத்தகவலை தீர்ப்புடன் இணைத்து அதை உத்தரவாகவும் ஒரு நீதிபதி குறிப்பிட்டுள்ளார் என்றால் இது அனைத்து எழுத்தாளர்களுக்கும் கிடைத்த பெருமை. இதன் மூலம் நியாயமான நல்ல கருத்துகளைப் பதிவிடும்போது, அது உரியவர்களின் கவனத்துக்குச் செல்லும் என்ற ஒரு நம்பிக்கை அனைத்து முகநூல் பதிவிடுபவர்களுக்கும் வரும். நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்” என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459