வாரிசு வேலை வழங்க கோரிய வழக்கு: டிசம்பருக்குள் பணி வழங்க உயர்நீதிமன்றம் ஆணை! - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/09/2020

வாரிசு வேலை வழங்க கோரிய வழக்கு: டிசம்பருக்குள் பணி வழங்க உயர்நீதிமன்றம் ஆணை!


கருணை அடிப்படையிலான வாரிசு வேலை கேட்டு மனு செய்தவரின் கோரிக்கையை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், கடலூர் மாவட்ட ஆட்சியரின் ஊதியத்திலிருந்து பிடித்து செய்து மனுதாரருக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவரின் தந்தை, கிராம உதவியாளராக பணியில் இருந்த போது கடந்த, 2003ம் ஆண்டு மரணமடைந்தார். கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு ரவி அளித்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவி வழக்கு தொடர்ந்தார். 
2011ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வாரிசு வேலை வழங்க மறுத்து 2011ம் ஆண்டு பிறப்பித்த அரசு உத்தரவை ரத்து செய்தார். மனுதாரருக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அரசு பணி வழங்கவேண்டும் என்றும் அவ்வாறு வழங்கவில்லை என்றால், 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் ரவியை அரசு கடைநிலை ஊழியராக கருதி ஊதியத்தை வழங்கவேண்டும் என்றார். 
இந்த உத்தரவு அமல்படுத்தபடவில்லை என்றால் கடலூர் மாவட்ட ஆட்சியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து ரவிக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459