கொரோனா காலத்தில் கடன் தவணை செலுத்தாமல் இருந்தவர்களின் பெயர்களை வாராக்கடன் பட்டியலில் சேர்த்தது ஏன் ?- நீதிமன்றம் சரமாரி கேள்வி - ஆசிரியர் மலர்

Latest

04/09/2020

கொரோனா காலத்தில் கடன் தவணை செலுத்தாமல் இருந்தவர்களின் பெயர்களை வாராக்கடன் பட்டியலில் சேர்த்தது ஏன் ?- நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி,
வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களின் மாதத் தவணையை கொரோனாவால் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாக கூறி, அதை ரத்து செய்ய கோரி கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, பேரிடர் மேலாண்மை சட்டடத்தின் கீழ் போதிய அதிகாரம் உள்ள நிலையில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொண்டு தங்கள் நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், அந்த வழக்கு, நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டபோது, “கொரோனா காலத்தில் எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கித் துறை, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. அதை வலுவிழக்கச் செய்யக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முடியாது. அதே வேளையில் கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிக்கடன் வட்டியை தள்ளுபடி செய்வதில்லை; வங்கிக் கடன்களை செலுத்துவதில் சில தளர்வுகள் அளிக்கவும், விவசாய கடன்கள் உள்ளிட்டவற்றுக்கு தவணை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடன்களுக்கான தவணைமீது அவகாசம் அளிப்பதன் நோக்கம் வட்டியை தள்ளுபடி செய்வதல்ல. கடன்களை செலுத்த வேண்டிய காலத்தை தள்ளிவைப்பதே நோக்கம்” என கூறினார்.
அப்போது நீதிபதிகள், “ரிசர்வ் வங்கியின் முடிவை ஏற்கனவே நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம். எங்கள் கேள்வி, இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதுதான். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு இந்த விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்பதுதான் எங்களது கேள்வி. எல்லா துறையும் வெவ்வேறு வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறீர்கள். அந்த பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தி நீங்கள் அணுகுனீர்களா? கடன் தவணை செலுத்தாமல் இருந்தவர்களின் பெயர்களை வாராக்கடன் பட்டியலில் சேர்த்துள்ளது தொடர்பாக என்ன விளக்கம் சொல்கிறீர்கள்?” என கேட்டனர்.
அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “வரும் 6-ந் தேதி நிபுணர்கள் குழு துறை ரீதியான வழிகாட்டு நெறிமுறைகளை அளிக்கிறது. மேலும் 2020 பிப்ரவரி 1-ந் தேதி முதல் கடன் தவணை கட்டுவதில் பிரச்சினை உள்ளவர்கள் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். ஆனால் கடந்த டிசம்பர் முதல் தவணை கட்ட தவறியவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடையாது” என கூறினார்.
உடனே நீதிபதிகள், “கொரோனா காலத்துக்கு முன்பு ஒருவருக்கு கடன் தவணை கட்டுவதில் பிரச்சினை என்றால் அவருக்கு கொரோனா காலத்தில் மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாதா?” என வினவினர்.
இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே, “மின் உற்பத்தி-வினியோக நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு வங்கி கடன்கள் தேவைப்படுகிறது. மின் உற்பத்தி துறையின் மொத்த கடன் சுமையையும் வங்கிகள் சுமக்க முடியாது. வேலை இழந்தவர்கள் வீட்டையும், சொந்த வாகனங்களையும் விற்று வருகின்றனர். தனிநபர்கள் பெற்ற வீட்டு கடனுக்கும், கட்டுமான நிறுவனங்கள் பெற்ற கடனுக்கும் வேறுபாடு உள்ளது. இதில், தனிநபர் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், சிறு குறு தொழிலுக்கான கடன்களில் நிவாரணம் வழங்க முடியும். எனவே தொழிற்சாலைகளின் பிரச்சினைகளையும் தனிநபர் பிரச்சினைகளையும் வெவ்வேறாக கையாள வேண்டும்” என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள்,“ தொழிலை சுமூகமாக தொடர்ந்து நடத்த உரிய நிவாரணத்தை வங்கிகள் வழங்க வேண்டும். கடன்களை பெற்றவர்களுக்கு உரிய நிவாரணத்தை வங்கிகளே வழங்க முடியுமா என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்த வேண்டும். கடன்தவணையை செலுத்த கால அவகாசம் வழங்கி விட்டு, பின்னர் அக்காலத்தில் செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டி என இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி செய்ய முடியும்? நிச்சயம் இது குறித்தும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க வேண்டும். அதேபோல வழக்குதாரர்கள் கோரிக்கை என்பது கூடுதல் நிவாரணம் ஆகும். ஆனால் அரசும், ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே தாங்கள் என்ன நிவாரணம் வழங்கியுள்ளோம் என்பதையே கூறுகின்றன. சலுகை காலத்தில் கடன் தவணை மீது விதிக்கப்படும் கூட்டு வட்டி தொடர்பான விளக்கம் என்ன? இந்த நேரத்தில் கடன் தவணை மீது அபராத தொகை விதிக்க முடியுமா என்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க வேண்டும்” என கூறினர்.
அதைத் தொடர்ந்து, வாராக்கடன் பட்டியல் உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க ஏதுவாக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது.
உடனே நீதிபதிகள்,“ வழக்கை ஒத்திவைத்தால், வாராக்கடன் பட்டியல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதி அளிக்க முடியுமா?” என கேட்டனர். அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுதான் தெரிவிக்க முடியும்” என பதில் அளித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், ஆகஸ்ட் 31-ந் தேதி வரை கடன் தொகையை கட்டாத கணக்குகளை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்க கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459