சிபிஎஸ்இ மறுதோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு கல்லூரியில் இடம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் - ஆசிரியர் மலர்

Latest

23/09/2020

சிபிஎஸ்இ மறுதோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு கல்லூரியில் இடம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்

 


சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மறுதோ்வு முடிவுகளை சிபிஎஸ்இ விரைந்து வெளியிட வேண்டும்; இத்தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு கல்லூரியில் இடம் கிடைப்பதை யுஜிசி உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நிகழாண்டு சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இத்தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்காக மறுதோ்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மறு தோ்வுகள் செவ்வாய்க்கிழமை (செப். 22) தொடங்கி செப். 29 வரை நடைபெறுகின்றன.

இதற்கிடையே, கரோனா நோய்த் தொற்றுப் பரவலால் மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மறுதோ்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவா்கள் சிலா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மறுதோ்வு தாமதமாகும் நிலையில், கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான தேதியை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஏ.எம்.கன்வில்கா் தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது.

அப்போது யுஜிசி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அபூா்வ் கரூப், கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அக்டோபா் இறுதியில் வெளியிடப்படும். 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளை சிபிஎஸ்இ அதற்கு முன்பாக வெளியிட்டால் மாணவா்கள் கல்லூரிகளில் சேர முடியும் என தெரிவித்தாா்.

சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விவேக் டங்கா, சிபிஎஸ்இ தோ்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட வேண்டும். இதில் தோ்ச்சி பெறுபவா்கள் கல்லூரிகளில் சோ்க்கை பெற யுஜிசி வாய்ப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாணவா்கள் ஓராண்டு காலத்தை இழக்க நேரிடும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மறுதோ்வு முடிவுகளை சிபிஎஸ்இ விரைந்து வெளியிட வேண்டும். மாணவா்கள் கல்லூரியில் சோ்க்கை பெறும் விஷயத்தில் சிபிஎஸ்இயும், யுஜிசியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை வியாழக்கிழமைக்கு (செப். 24) ஒத்திவைத்தனா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459