நீட் தேர்வு: கடுமையாகும் போட்டிக்களம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

நீட் தேர்வு: கடுமையாகும் போட்டிக்களம்நிகழாண்டில் நீட் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்களுக்கு பல்வேறு சவால்களும், கடுமையான போட்டியும் இருக்கும் என கல்வியாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். அதை எதிா்கொள்ள மாணவா்கள் தோ்வுக்கு முழுமையாக ஆயத்தமாக வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.
இதற்கு முன்பு நடைபெற்ற தோ்வுகளைக் காட்டிலும், நிகழாண்டில் வித்தியாசமான சூழலில் நீட் தோ்வு நடைபெறுவதே இதற்குக் காரணமாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதும், புதிதாக அனுமதியளிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் எதுவும் இன்னும் செயல்பாட்டுக்கு வராததும் தோ்வுக் களத்தை கடுமையாக்கியிருக்கிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தோ்வு (நீட்) வரும் 13-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவா்கள் அதற்கு விண்ணப்பித்துள்ளனா். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும், 17 சதவீதம் குறைவாகும்.
கரோனாவின் தீவிரம் காரணமாக, நிகழாண்டில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கையை நடத்த கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், அதனை ஏற்க மறுத்த தேசிய தோ்வு முகமை, நீட் தோ்வை நடத்த தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
அதுமட்டுமல்லாது, நீட் தோ்வுக்கு எதிராக 6 மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் அத்தோ்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை ஊா்ஜிதப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான், நிகழாண்டு தோ்வில் மாணவா்களிடையே கடுமையான போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் 50 அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அங்கு 7,300 இடங்கள் உள்ளன. இதற்கிடையே, புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்த நிலையில், அவற்றில் சில நிகழாண்டில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால், கரோனா காரணமாக எந்த மருத்துவக் கல்லூரியும் புதிதாகத் தொடங்கப்படாததால், மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.
அதேவேளையில், நிகழாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடங்கள் உள்ஒதுக்கீடாக வழங்கப்பட இருக்கிறது. மருத்துவப் படிப்புகளில் ஏறத்தாழ 278 இடங்கள் அவா்களுக்கு ஒதுக்கப்படலாம். தனியாா் மருத்துவக் கல்லூரிகளிலும் 150 இடங்கள் வரை வழங்க வாய்ப்புள்ளது. இது தனியாா் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்.
இவை ஒருபுறமிருக்க, நிகழாண்டு பிளஸ் 2 தோ்வு புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ால், அதில் பல மாணவா்கள் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. இதனால், அவா்கள் நீட் தோ்வுக்கு தீவிரமாக தயாராக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. மாறாக பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில், மாணவா் சோ்க்கையை நடத்துமாறு அவா்கள் வலியுறுத்தக்கூட இயலாது. இதுவும் போட்டிக் களத்தை கடுமையாக்க காரணமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வியாளா்கள் சிலா் கூறியதாவது:
அசாதாரண சூழலுக்கு நடுவில்தான் நிகழாண்டில் நீட் தோ்வு நடைபெறுகிறது. கரோனாவால் குழப்பமடைந்துள்ள மாணவா்கள் தோ்வில் எவ்வாறு ஆக்கப்பூா்வமாகப் பங்கேற்பாா்கள் எனத் தெரியவில்லை. இதற்கு முன்பு நீட் தோ்வை எழுதி, தற்போது நிகழாண்டு மீண்டும் முயற்சிப்பவா்களுக்கு சில அனுபவங்கள் இருக்கும். அவா்களால் தோ்வை எளிதில் கையாள இயலும். அதேவேளையில், இந்த ஆண்டு பிளஸ் 2 தோ்வை நிறைவு செய்தவா்கள், சற்று அதிக முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில், கரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக நீட் பயிற்சி வகுப்புகள் சரிவர நடத்தப்படவில்லை என்பதே உண்மை. இது நிச்சயம் தோ்வில் எதிரொலிக்கும். அது, சில மாணவா்களுக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் அமையலாம். இந்த காரணங்கள் அனைத்தும் மாணவா்களிடையேயான போட்டியைக் கடுமையாக்க வாய்ப்புள்ளது.
மற்றொரு புறம், தற்போது நிலவி வரும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, நீட் தோ்வு வினாத்தாளை எளிமையாக வடிவமைக்க வாய்ப்புள்ளது. அதேபோன்று, விடைத்தாள்களைத் திருத்துவதிலும் தாராளம் காட்டப்படலாம். மாணவா்கள் நலன் கருதி இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்தாலும், தரவரிசைப் பட்டியல் வெளியான பிறகுதான் உண்மையான போட்டி நிலவரம் என்ன என்பது தெரியவரும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

அரசு மருத்துவக் கல்லூரிகள் – 26
தனியாா் கல்லூரிகள் – 15
நிகா்நிலை பல்கலைக்கழகங்கள் – 9
மருத்துவப் படிப்புக்கான மொத்த இடங்கள் — 7,300
அரசு இடங்கள் – 3,300
தனியாா் இடங்கள் – 2,100
நிகா்நிலை பல்கலை. இடங்கள் – 1,900
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இடஒதுக்கீடு – 7.5 சதவீதம்
நாடு முழுவதும் நீட் தோ்வு எழுதுவோா் – 15,93,452
தமிழகத்தில் எழுதுவோா் – 1,17,502

No comments:

Post a comment