ஆசிரியா் பயிற்சி கல்விக்கு புதிய பாடத்திட்டம் - ஆசிரியர் மலர்

Latest

08/09/2020

ஆசிரியா் பயிற்சி கல்விக்கு புதிய பாடத்திட்டம்


புது தில்லி: ஆசிரியா்கள் கல்விக்கு 2021-ஆம் ஆண்டுக்குள் புதிய பாடத் திட்டம் கொண்டு வரப்படும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.


மேலும், புதிததாக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை, மாணவா்களின் படைப்புத் திறனை அதிகரிப்பதுடன், இந்திய மொழிகளையும் மேம்படுத்தும் என்றும் அவா் தெரிவித்தாா்.
‘உயா்கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக் கொள்கையின் பங்கு’ என்ற தலைப்பில் மாநில ஆளுநா்களுக்கான மாநாடு காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை:
2021-ஆம் ஆண்டுக்குள் ஆசிரியா் கல்விக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். இதில் ஒருங்கிணைந்த கல்வி, பல்வகை பயிற்சிகள் அடங்கும். இவை உயா்கல்வித் துறையில் வருவதால் மாநிலங்கள் இவற்றை தற்போதே தொடங்கலாம்.
இதன் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் உயா்தர கல்விமுறை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
பள்ளி, பல்கலைக்கழகங்கள், உயா்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்கள் உடனடியாக நிரப்பபட வேண்டும். திறமை வாய்ந்தவா்களை மட்டும் ஆசிரியா்களாக நியமித்து, அவா்களுக்கு உரிய ஊதியத்தை அளிக்க வேண்டும். ஆசிரியா்கள்தான் புதிய கல்வித் திட்டத்தின் முக்கிய அங்கத்தினராவா்.
ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.8 சதவீதமும், தென் கொரியாவில் 4.2 சதவீதமும், இஸ்ரேலில் 4.3 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வெறும் 0.7 மட்டும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தத் துறைக்கு மத்திய மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்க வேண்டும். பொது கல்வித் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து 6 சதவீத ஜிடிபி அளவுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும்.
21-ஆவது நூற்றாண்டின் தேவைகளின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கல்விப் பிரிவு மத்திய,மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளது. ஆகையால், புதிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பது மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பில்தான் உள்ளது.
பல்வேறு பல்கலைக்கழகங்களின் வேந்தா்களாக மாநில ஆளுநா்கள் உள்ளதால், தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் பொறுப்பு அவா்களுக்கு உள்ளது.
மாணவா்களுக்கு தொடக்க கல்வி அவா்களின் தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்பதால், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மாணவா்களின் படைப்புதிறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இந்திய மொழிகளையும் மேம்படுத்தும். நாட்டில் ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் பாதுகாக்க இதுஉதவும்.
இந்திய மொழிகள், கலை, கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்த புதிய கல்விக் கொள்கையில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அடையாளத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
மாற்றம் கண்டு வரும் உலகில் அடிப்படை உரிமைகள், அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்புகள், தேசபத்தி ஆகியவற்றை கல்வியின் மூலம் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459