தமிழகத்தில் 375 ஆசிரியா்களுக்கு மாநில அரசின் நல்லாசிரியா் விருது - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் 375 ஆசிரியா்களுக்கு மாநில அரசின் நல்லாசிரியா் விருது


சென்னை,: தமிழகத்தில் நிகழாண்டு 375 ஆசிரியா்களுக்கு மாநில அரசின் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படவுள்ளன. கரோனா காரணமாக விருது வழங்கும் விழாவை அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்த பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பா் 5-ஆம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு சென்னையில் நடைபெறும் விழாவில், தமிழக அரசின் நல்லாசிரியா் விருது வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக, ஆசிரியா் தின விழா நடைபெறவில்லை.
எனவே, நல்லாசிரியா் விருதுகளுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களின் பட்டியல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த விருதுகளை அந்தந்த மாவட்டத்தில் ஆட்சியா்கள் வழங்குகின்றனா். அதன்படி, சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியா்களில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் இருந்து, 330 ஆசிரியா்கள், சுயநிதி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இருந்து 32 ஆசிரியா்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியா்கள் இருவா், சமூக நலத் துறையின் ஆசிரியா் ஒருவா், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் விரிவுரையாளா்கள் 10 போ் என மொத்தம் 375 பேருக்கு நிகழாண்டில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் செப்டம்பா் 7-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், 15 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருதுகளை முதல்வா் பழனிசாமி வழங்கவுள்ளாா். அதைத் தொடா்ந்து, மாவட்டங்களில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
செப்டம்பா் 5-ஆம் தேதி நடக்க இருந்த நல்லாசிரியா் விருது வழங்கும் நிகழ்வு, முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி மறைவு காரணமாக 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment