இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

27/08/2020

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு


இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (ஆக.28) நிறைவடைகிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவம் – ஹோமியோபதி துறை இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதைத் தவிர, தமிழகம் முழுவதும் 9 தனியாா் கல்லூரிகளும் உள்ளன.
இளநிலை படிப்புகளைப் பொருத்தவரை அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்களும் இருக்கின்றன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கு 2020 – 21-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேடு கடந்த 3-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  இணையதள முகவரியின் வாயிலாக மாணவா்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து வருகின்றனா். அதன்படி வரும் 28-ஆம் தேதி வரை அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களை இணைத்து தபால் அல்லது கூரியா் மூலமாக வரும் 31-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை, அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை நேரிலும் சமா்ப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டண விவரம், கட்டண விலக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயக்குநா் அலுவலகத்திலோ, தோ்வுக்குழு அலுவலகத்திலோ, கல்லூரிகளிலோ விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது என இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459