அரசு ஊழியர்களின் ஊழல் புகார் வழக்குகள் விபரம் கோரும் உயர் நீதிமன்றம் - ஆசிரியர் மலர்

Latest

27/08/2020

அரசு ஊழியர்களின் ஊழல் புகார் வழக்குகள் விபரம் கோரும் உயர் நீதிமன்றம்

மதுரை: அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிக்க அனுமதி கேட்டு எத்தனை மனுக்கள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து, கண்காணிப்பு ஆணையர், தலைமை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் கல்லூரி உள்ளது. கடந்த 2014ல் உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக இருந்தன.
இந்த நியமனங்களுக்கு எந்தவிதமான முறையான அறிவிப்பும் வெளியிடவில்லை. ரூ.5 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு போலி ஆவணங்கள் மூலம் பலர் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இதேபோல் 2018லும் பல பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நீதிமன்றம் தலையிட்டு முறைகேடாக நியமனம் பெற்றவர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது என்றும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘‘ஊழல் புகார்களை விசாரணைக்கு அனுமதிப்பதில் அதிக தாமதம் ஏற்படுகிறது. ஊழல் வழக்குகள் முடிவுக்கு வர 20 முதல் 25 ஆண்டுகளாகிறது. இதனால் குற்றம் செய்தவர்கள் எளிதில் தப்பி விடுகின்றனர். இந்த வழக்கில் மனுதாரர் 19.11.2019ல் அனுப்பிய புகாரை விசாரிக்க சட்டப்படி அனுமதிக்க  8 மாதமாகியுள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சட்டப்பிரிவு 19 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 197ன் கீழ், அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார் மீது தனிநபர்கள் அனுமதி பெற என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது?
இவ்வாறு எத்தனை தனிநபர்கள் அனுமதி கேட்டுள்ளார்கள்? அவர்களின் கோரிக்கையின் தற்போதைய நிலை என்ன? தமிழகத்தில் ஊழல் புகார்கள் விசாரணை தொடர்பாக, அனுமதி கேட்டு வரப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் எத்தனை? இந்த மனுக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும்? விசாரணைக்கு அனுமதி வழங்குவது எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பது தொடர்பாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஆணையர் மற்றும் தலைமை செயலர் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459