ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளிடையே ஏற்படும் குணமாற்றம்; கவலையில் பெற்றோர் - ஆசிரியர் மலர்

Latest

27/08/2020

ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளிடையே ஏற்படும் குணமாற்றம்; கவலையில் பெற்றோர்


கரோனா பொது முடக்கத்தால் கற்றலில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றங்களில் ஒன்று வகுப்பறைகளை ஆன்லைன் வகுப்புகளாக மாற்றியதுதான். இதனால், தொடவே கூடாது என்று கூறிவந்த பிள்ளைகளிடம் பெற்றோரே செல்லிடப்பேசியை எடுத்துக்கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால், செல்லிடப்பேசி மூலம் பாதுகாப்பாகக் குழந்தைகள் கல்வி பயில்கிறார்கள் என்று பெற்றோர் நினைத்துக் கொண்டிருந்தாலும், அதன் இலவச இணைப்புகளாகக் கிடைத்திருப்பது குழந்தைகளின் குணமாற்றமும் கண் மற்றும் தலைவலிகளும்தான்.
பள்ளிகளுக்குள் செல்லிடப்பேசியை எடுத்து வரத் தடை விதித்த காலம் மாறி, பள்ளியையே செல்லிடப்பேசிக்குள் கொண்டு வந்திருக்கிறது இந்த கரோனா காலம்.
வரும் விஜயதசமிக்கு, பூஜையில் புத்தகத்தை வைப்பதா அல்லது செல்லிடப்பேசியை வைப்பதா என்பது போன்ற நகைச்சுவைகளும் உருவாகிப் பரவிவருகின்றன. இது நகைச்சுவையாக இருந்தாலும், சிந்திக்க வேண்டிய விஷயமாகிவிட்டது.
இது பற்றி கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மூத்த மனநல ஆலோசகர் ஒருவர் கூறுகையில், “குழந்தைகள் பலரும் பொறுமையை இழப்பதாகவும், அவ்வப்போது எரிச்சல் அடைவதாகவும், கண் வலி, தலைவலி என்று கூறுவதாகவும் பல புகார்கள் பெற்றோரிடம் இருந்து வந்துகொண்டே இருக்கின்றன.
“ஆனால் இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு என்னால் ஆலோசனை அளிக்க முடியாது, பெற்றோருக்கு மட்டுமே இந்த சூழ்நிலையை சமாளிப்பது எப்படி என்று அறிவுரை வழங்க முடியும்”  என்கிறார்.
பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மோதி லால் நேரு மருத்துவமனையில் பணியாற்றும் மன நல ஆலோசகரும், சமீபகாலமாக செல்லிடப்பேசிக்கு அடிமையாதல் மற்றும் குணநல மாற்றங்களைக் காரணம்காட்டி ஏராளமான பெற்றோர் தங்களது பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை உறுதி செய்துள்ளார்.
கரோனா பொது முடக்கக் காலம் தொடங்கியபோது குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் நாளடைவில் மங்கி, மறைந்து போய்விட்டதாகவும், தற்போது குழந்தைகள் பெற்றோருடன் பேசுவது குறைந்துவிட்டதாகவும், பிள்ளைகளைப் பேணும் நடவடிக்கைகளும், ஒருவருக்கு ஒருவர்  மனம் விட்டுப் பேசுவதும், குழந்தைகளைக் கண்காணிப்பதும் குறைந்திருப்பதாக எம்எல்என் மருத்துவமனை மன நல மருத்துவர் ராஜ் தெரிவிக்கிறார்.
அனைவருமே இந்த கரோனா பேரிடர் காலத்தில், தங்களது உலகைத்  தொழில்நுட்பம் வாயிலாகக் காண முயலுகிறார்கள். தற்போதிருக்கும் குடும்பச் சூழலில் பிள்ளைகள், தங்களது தனித்துவமான திறமைகளை வளர்க்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதை செல்லிடப்பேசி மூலமாகவும், செல்லிடப்பேசி விளையாட்டுகள் மூலமாகவும் வெளிப்படுத்துகிறார்கள்.
சில பிள்ளைகள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேலாக செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து வீட்டுப் பாடம், வீட்டுக் கணக்கு என எழுதியோ அல்லது டைப் செய்தோ செல்லிடப்பேசியில் பதிவேற்றி, அதனை ஆசிரியருக்கு அனுப்பி, ஆசிரியரின் ஒப்புதலைப் பெறுவது வரை நீடிக்கிறது  ஆன்லைன் வகுப்பு என்ற நடைமுறை.
ஒருவேளை ஆசிரியருக்கு மாணவர்கள் அனுப்பிய வீட்டுப்பாடமோ, தேர்வுக்கான விடைத்தாளோ கிடைக்காவிட்டால் அந்த மாணவரின் துயரம் சொல்லில் மாளாது. இதில், மாணவர்களுக்கு இருக்கும் சிக்கல்களைவிட, ஆசிரியர்கள் அடையும் சிரமத்தைப் பற்றி மற்றொரு நீண்ட கட்டுரையே எழுதலாம்.
பகல் நேரம் முழுவதும் படிப்புக்காக செல்லிடப்பேசியில் மூழ்கும் மாணவர்கள், தங்களது பொழுதையும் அதிலேயே போக்கும் நிலை ஏற்படுகிறது.
செல்லிடப்பேசியில் அவர்கள் நினைத்ததைச் செய்ய முடிகிறது. இருந்த இடத்திலேயே எத்தனை மணி நேரத்தையும் அவர்களால் செலவிட முடியும். அதுவே பழகி மிக வசதியாக மாறிவிட்டதால், பெற்றோரிடம் பேசுவதற்குக்கூட அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இன்னும் சில பிள்ளைகள் சக தோழர்களுடன் விளையாடுவதைக்கூட நிறுத்திக் கொண்டுவிட்டனர்.
இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று, அருகருகே அமர்ந்துகொண்டேகூட சில சிறுவர்கள் கையில் செல்லிடப்பேசியை வைத்துக்கொண்டு அவரவர் விளையாட்டுகளில் மூழ்கிக் கிடக்கும் பெருந்துயரக் காட்சிகளையும் சில வீட்டு மொட்டை மாடிகளில் காண முடிகிறது.
வீட்டை விட்டு வெளியேச் செல்லாமல், எதையாவது செய்து கொண்டிருந்தால் போதும் என்ற நிலைக்குப் பெற்றோர் தள்ளப்பட்டிருப்பதும் இந்த நிலைக்குக் காரணம்.
செல்லிடப்பேசியைக் காட்டினால்தான் சாப்பாடு சாப்பிடுகிறான் என்று சின்னஞ்சிறு குழந்தையைக் காட்டி அம்மாக்கள் குற்றம்சாட்டும் நிலையில் இருந்து தொடங்குகிறது இந்த துயர வாழ்வு.
அதுவே, குழந்தைகளின் வழக்கமாகி, செல்லிடப்பேசிக்கு அடிமையாகி, குணமாற்றத்தைப் பிள்ளைகளிடம் காணும்போதுதான் பெற்றோருக்கு நடந்த விபரீதத்தின் அபாயம் உணரப்படுகிறது.
ஆன்லைன் வகுப்புகளை முடித்துவிட்டு, செல்லிடப்பேசி விளையாட்டுகளில் மூழ்கிக் கிடக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் தரப்பிலோ, தங்களது பிள்ளைகள் எதைக் கேட்டாலும் பதில் சொல்வது கிடையாது, திட்டினால், பொருள்களை தூக்கி அடிக்கும் நிலையில் உள்ளனர். குழந்தைகள் வெளியே சென்று விளையாட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியாத நிலையில் அவர்களிடம் தற்போது குணமாற்றத்தைக் காண முடிவதாகவும் கூறுகிறார்கள்.
இந்த சூழ்நிலையை மாற்ற, பெற்றோரால் மட்டுமே முடியும் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.
பிள்ளைகளிடம் மெல்ல பேச்சுக் கொடுத்து, அவர்களிடம் உரையாடும் நேரத்தை அதிகரியுங்கள். உங்களுக்கு வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களை உங்களுடன் இருக்க வையுங்கள். உங்களுடன் சின்ன சின்ன வேலைகளை பகிர்ந்துகொள்ளப் பழக்கப்படுத்துங்கள். செல்லிடப்பேசியைத்  தொடர்ந்து பயன்படுத்தாமல், அதில் இருந்து சில நேரம் ஓய்வு எடுக்க பிள்ளைகளைப் பழக்குங்கள் என்கிறார்கள்.
கண் வலி அல்லது தலைவலி என்று சொல்லும் மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து ஓய்வு எடுக்கவோ / கொடுக்கவோ ஆசிரியர்களும், பெற்றோரும் முன் வர வேண்டும். ஆன்லைனில் விளையாடும்போது கண் வலிக்கவில்லையா? என்று கேட்பதை விடுத்து, சின்னச் சின்னப் புகாராக இருந்தாலும் அதை செவிமடுத்துக் கேளுங்கள். சின்னச் சின்ன மாற்றங்களை செய்து கொடுங்கள் என்று கூறுகிறார்கள்.
கரோனாவே எப்போது தொலையும் எனத் தெரியவில்லை. அதன் பிறகுதான் செல்லிடப் பேசிகளின் மயக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். அதற்குள் இன்னமும் என்னென்னவெல்லாம் நடக்கப் போகின்றனவோ, எத்தகைய குணக்கேடுகளெல்லாம் உருவாகுமோ, எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ?

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459